ஜோதிமணி தனித்து நின்றால் மகிழ்ச்சிதான். குஷ்பு
திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அவை என்னென்ன தொகுதிகள் என்பதும் நேற்று மாலை முடிவாகிவிட்டது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றும் அந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் தலைமை தனக்கு வாய்ப்பளிக்கும் என்றும் உறுதியாக நம்பிய ஜோதிமணி இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட 41 தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி இடம்பெறவில்லை. இதனால் ஜோதிமணி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த தொகுதியில் தான் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு, ” தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதிகளையும், நாங்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளையும் ஒதுக்கியிருக்கிறார்கள். கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என முன்பே பேசி முடிவு செய்துவிட்டோம். தலைமையின் முடிவுக்கு எதிராக தனித்து போட்டியிட விரும்பினால், ஜோதிமணி தாராளமாக தனித்துப் போட்டியிடட்டும். அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறினார்.