மன நல சோதனைக்கு நீதிபதி கர்ணன் மறுப்பு. மருத்துவர்களை திருப்பி அனுப்பினார்

மன நல சோதனைக்கு நீதிபதி கர்ணன் மறுப்பு. மருத்துவர்களை திருப்பி அனுப்பினார்

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மனநலப் பரிசோதனைக்கு உட்பட கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் மறுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சமீபத்தில் நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. இதனால் இன்று மனநலப் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்களும், காவலர்களும் நீதிபதி கர்ணன் வீட்டிற்கு சென்றனர். ஆனால் பரிசோதனைக்கு உட்பட மறுப்பு தெரிவித்து, காவலர்களிடம் கடிதத்தைத் நீதிபதி கர்ணன் திருப்பிக் கொடுத்தார். மேலும் 7 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் நீதித்துறையின் தீவிரவாதிகள். என்னால் மனநல பரிசோதனைக்கு உடன்பட முடியாது என்று கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக சமீபத்தில் ஊழல் புகார் தெரிவித்தார். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை.

இதனையடுத்து இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக நீதிபதி கர்ணனை கைது செய்ய கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி உச்ச நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. அதன்பின் சுப்ரீம் கோர்ட்டில் அவர் ஆஜரானார்.

அதன்பின்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், அவர்கள் தனது முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் அடுத்தடுத்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் மே 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி கர்ணனுக்கு, மே 4-ம் தேதி கொல்கத்தா அரசு மருத்துவமனையில் மனநலம் குறித்த மருத்துவ சோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு பதிலடியாக நீதிபதி கர்ணனும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 6 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு டெல்லி எய்ம்ஸில் மனநலப் பரிசோதனை நடத்தி, வரும் 7-ம் தேதிக்குள் என்னிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் பணியை டெல்லி போலீஸார் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்திருந்தார்

Leave a Reply