கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதியை கர்நாடக ஐகோர்ட் நாளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஜெயலலிதா தரப்பின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் செந்தில் நேற்று ஆஜராகி, 177 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை நீதிபதி முன் தாக்கல் செய்தார்.
அதேபோல சொத்து மறு மதிப்பீடு பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில், இரு தரப்பு ஒப்பீடு அறிக்கையும் நேற்றைய விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்டியல்களின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார் மற்றும் செந்தில் பதில் அளித்தனர்.
இதற்கிடையே வழக்கின் விசாரணையை நீதிபதி இன்று ஒத்தி வைத்துள்ளார். மேலும், சுப்பிரமணியன் சாமி இன்று தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யவிருப்பதால், இந்த வழக்கின் தீர்ப்பு தேதியை நீதிபதி இன்று அல்லது நாளை அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேதி நெருங்குவதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.