திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டதை தொலைக்காட்சியில் சனிக்கிழமை பார்த்துக் கொண்டிருந்த பெண், மாரடைப்பால் உயிரிழந்தார்.
மற்றொரு அதிமுக தொண்டர் ஒருவர் தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி முத்துலாபுரத்தைச் சேர்ந்த கதிரவன் மனைவி பாலம்மாள் (52). கணவரை இழந்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பத்தை அறிந்த வத்தலகுண்டு ஒன்றிய குழுத் தலைவர் மோகன், சேவுகம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் நேரில் சென்று பாலம்மாளின் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர்.
தற்கொலை முயற்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்பை அடுத்து, வத்தலகுண்டில் அதிமுக தொண்டர் சோலைராஜ் (40), பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி குணசேகரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கோபுரத்தில் ஏறி சோலைராஜை மீட்டனர்.