சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பால் ஜெயலலிதாவுக்கோ அல்லது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கோ பின்னடைவு இல்லை. பின்னடைவு தமிழ்நாட்டுக்குத்தான் என்று பிரபல பத்திரிகையாளரும் ஜெயலலிதாவின் அரசியல்ஆலோசகராக இருக்கும் சோ. ராமசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ‘சோ’ ராமசாமி இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘இந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானது அல்ல. அவருக்கு நிச்சயம் அனுதாபத்தைத்தான் இந்த தீர்ப்பு வழங்கும்.
தற்போதைய நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவே தவிர ஜெயலலிதாவுக்கு அல்ல.
ஜெயலலிதா தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வெளியே வருவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகள் அவர் முன்பு இருக்கின்றன. இவ்வாறு சோ ராமசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சர்ச்சைக்குரிய நிறுவனங்களின் இயக்குநராக சோ ராமசாமியும் பணியாற்றினார் என்ற ஆதாரங்களை வெளியிட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி இவரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.