முன்னேற்றத்திற்கு உதவும் மூலிகை ஜூஸ் கடை. திருவேற்காடு இளைஞர்

7ஜங்க் புட்’ எனப்படும் துரித உணவுகளை நோக்கி படையெடுக்கும் காலகட்டத்தில் உடல்நலத்துக்கு நன்மை பயக்கும் மூலிகை ஜூஸ் கடையைத் திறந்து மக்களுக்கு நன்மை செய்துவருகிறார் திருவேற்காடு இளைஞர்.

நம் முன்னோர் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது, மக்கள் நோய் நொடியில்லாமல் நூறு வயது வரை வாழ்ந்தனர். ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கையில் மருந்தே உணவாக மாறி 40 வயதுக்குள் மனிதன் நோய்வாய்படுகிறான்.

முந்தைய உணவு முறைகளையும், மூலிகைப் பொருள்களையும் உண்ண மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதை சாதகமாகப் பயன்படுத்தி திருவேற்காடு பகுதியில் கற்றாழை உள்ளிட்ட மூலிகை ஜூஸ்களை இளைஞர் ஒருவர் விற்பனை செய்து வருகிறார்.

இங்கு விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. அதிகாலையில் ஆர்வமாக வந்து வெறும் வயிற்றில் ஜூஸ் அருந்தி செல்கின்றனர்.

இது குறித்து திருவேற்காடு பகுதியில் மூலிகை ஜூஸ் விற்பனை செய்யும் புருஷோத்தமன்(30) கூறியது:

“இன்றைய நவீன காலத்தில் மக்கள் அனைவரும் இயற்கை உணவுகளைத் தவிர்த்து பிசா, பர்கர் மற்றும் பாஸ்ட் புட் உணவு வகைகளை சாப்பிட்டு உடல்நலத்தை கெடுத்து கொண்டுள்ளனர்.

மூலிகைப் பொருள்களின் பயன்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைந்து, தற்போது கொஞ்சம், கொஞ்சமாக மூலிகைப் பொருள்களை நாடி செல்கின்றனர். ஆனால் மூலிகைப் பொருள்கள் மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. எனவே மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் திருவேற்காட்டில் சிறிய அளவில் ஜூஸ் கடையை வைத்து நடத்தி வருகிறேன்.

மேலும் கற்றாழை, அருகம்புல், பாகற்காய், வாழைத்தண்டு, முழு நெல்லி உள்ளிட்ட ஜூஸ்களை குறைந்த விலையில் விற்று வருவதால், எனது கடையை நாடி தினமும் ஏராளமானோர் வந்து ஜூஸ் அருந்தி செல்கின்றனர்.

கற்றாழையை தோல் நீக்கி மோர் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு சொம்பு ரூ.20-க்கு விற்கிறேன். இதேபோல் மற்ற மூலிகை ஜூஸ்களை ரூ.10-க்கு விற்பனை செய்கிறேன். இதில் கற்றாழை ஜூûஸ மக்கள் அதிக அளவில் வாங்கி விரும்பி அருந்துகின்றனர். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஜூஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறேன்.

காலை 5 மணி முதல் கற்றாழை, அருகம்புல், பாகற்காய், வாழைத்தண்டு, முழு நெல்லி போன்ற ஜூஸ்கள் தயாராகி விடும். இதை அதிகாலை வெறும் வயிற்றில் அருந்தி விட்டு வாக்கிங் செல்ல தினமும் ஏராளமானோர் எனது கடைக்கு வருகின்றனர்.

தற்போது வியாபாரம் நன்றாக நடக்கிறது. காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை  ஜூஸ் விற்கிறேன்.

இதில் எல்லா செலவுகளும் போக நாள் ஓன்றுக்கு ரூ.1000 வரை சம்பாதித்து வருகிறேன். மக்களிடம் இந்த ஜூஸ் கடைக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, விரைவில் திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடி, கோலடி ஆகிய இரண்டு இடங்களில் புதிய ஜூஸ் கடையை அமைக்க திட்டமிட்டுள்ளேன்’ என அவர் தெரிவித்தார்.

Leave a Reply