விக்கிலீக்ஸ் அசாஞ்சே பாதுகாப்பிற்கு ரூ.100 கோடி. பிரிட்டன் தூதரகம் தகவல்

assangeஅமெரிக்காவால் தேடப்பட்டு வரும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக பிரிட்டனின் காவல்துறை கடந்த 7ஆண்டுகளில் சுமார் ரூ. 100 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க ராணுவம் மற்றும் பல்வேறு அரசு ரகசிய கோப்புகளை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்கா அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க அரசிடம் இருந்து பிடிபடாமல் தப்பிக்க அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு தஞ்சம் புகுந்தார்.

இதனிடையே, ஸ்வீடனில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், பாலியல் வழக்கை சந்திக்க ஸ்வீடனுக்கு அவர் நாடு கடத்தப்படுவது நிச்சயம் என்ற நிலையில் அவர் தூதரகத்திலேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.

இதன் காரணமாக ஈக்வடார் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாகவும், இதனால் பாதுகாப்பு செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கான செலவு குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எல்.பி.சி. ரேடியோ எனும் செய்தி வானொலி நிலையம் சேகரித்த தகவலின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக செலவான தொகை ரூ.90 கோடி என்றும், தற்போது அது ரூ.100 கோடியை கடந்திருக்கும் என ஸ்காட்லாந்து யார்டு வட்டாரங்கள் தெரிவித்தன. மக்களின் வரிப்பணத்தில் தனி மனிதர் ஒருவரின் பாதுகாப்பிற்காக பிரிட்டன் அரசு இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்திருப்பதாக எல்.பி.சி ரேடியோ செய்தி வெளியிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply