டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முன்வராததால் சட்டப்பேரவையை கலைக்க ஜனாதிபதிக்கு அம்மாநில கவர்னர் நஜீப் பரிந்துரை செய்துள்ளார். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு மெஜாரட்டிக்கு கிடைக்கவில்லை. 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த தனிப்பெரும் கட்சியாக விளங்கிய ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசுடன் மோதல் போக்கினை கடைபிடித்ததால் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு 48 நாட்களில் பதவி விலகியது.
இதையடுத்து, டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சியமைப்பது தொடர்பாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அரசியல் கட்சிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். ஆனால் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி ஒப்புக்கொள்ளவில்லை. பாரதிய ஜனதாவும் ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டதால், டெல்லி அரசை கலைக்க கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் இன்று பரிந்துரை செய்துள்ளார். அதில், டெல்லியில் அரசியல் நிலவரம் குறித்து அறிக்கை அனுப்பியுள்ளார்.
இதனால், டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.