தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஆர்.எம்.லோதா அவர்களின் பதவிக்காலம் வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைவை அடுத்து புதிய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் எச்.எல்.தத்து நியமிக்கப்பட்டுள்ளார். 64 வயதான தத்துவுக்கு நேற்று இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார்.
வரும் 28 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் எச்.எல் தத்து, எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக பணிபுரிவார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த எச்.எல்.தத்து, அங்குள்ள ஹண்ட்யாலா என்ற ஊரில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பிறந்தவர். இவரது முழுப்பெயர் ஹண்ட்யாலா லட்சுமி நாராயணசாமி தத்து.
பெங்களூரில் 1975 ஆம் ஆண்டு தனது வழக்கறிஞர் பணியை தொடங்கிய தத்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், சத்தீஷ்கர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மே மாதம் கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.