ரூ.14 கோடி இழப்பீடு வேண்டும். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு நீதிபதி கர்ணன் கடிதம்
கைது வாரண்ட் பிறப்பித்து தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.14 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், சென்னை உயர்நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி, மற்றும் பல நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறினார். அதுமட்டுமின்றி இதுகுறித்த புகார்களை பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட பலருக்கு அனுப்பினார். இதனால் நீதிபதி கர்ணன் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது
இந்த வழக்கில் ஆஜராக நீதிபதி கர்ணனுக்கு இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் அவர் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி கர்ணனுக்கு ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் ஒன்றை பிறப்பித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்தனர்.
இந்த உத்த்ரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் அரசியல்சாசன பெஞ்சிற்கு இழப்பீடு வழங்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும், பொது மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதற்காகவும் இழப்பீடாக ரூ.14 கோடி தர வேண்டும் என்று கர்ணன் குறிப்பிட்டுள்ளார்.