நீதிபதி கர்ணனின் மனநிலைக்கு என்ன ஆச்சு?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று நேரில் ஆஜரான நீதிபதி கர்ணனுக்கு மனநிலை சரியக இல்லை என்று கருதுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனநிலை சரியில்லாத ஒரு நீதிபதி, எவ்வாறு இவ்வளவு நாள் தீர்ப்பு கொடுத்து வந்தார் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கொல்கத்தா நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்மன்ற நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதினார். இதனால் உச்சநீதிமன்றம் கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானாக முன்வந்து பதிவு செய்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை தெரிவித்தும் கர்ணன் நேரில் ஆஜராகததால் அவருக்கு ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து, உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று ஆஜரானார்.
நேற்றைய விசாரணையின்போது நீதிபதி கர்ணன் மன்னிப்பு கேட்க தயாரா அல்லது வழக்கறிஞரைக் கொண்டு வாதாட போகிறாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் கர்ணன் அனைத்தையும் தெரிந்தே செய்துள்ளார் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். அவரது மனநிலை தெளிவாக இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். என் பணியை செய்யவிட்டால் மட்டுமே, நான் இயல்பு நிலைக்கு திரும்புவேன் என்று நீதிபதி கர்ணன் கூறினார். இல்லையெனில் மறுமுறை ஆஜராக மாட்டேன் என்றும் குறிப்பிட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், 4 வாரத்தில் பதிலளித்த நீதிமன்றம் உத்தரவிட்டது.