அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கை விசாரணை செய்ய நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமனம் செய்யபட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடம் சிறைதண்டனையும் ரூ.100 கோடி அபராத தண்டனையும் பெற்ற ஜெயலலிதா, தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் நீதிபதியாக குமாரசாமியை நியமித்து கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா இன்று உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக நியமனம் செய்யபட்டுள்ள நீதிபதி குமாரசாமி, கர்நாடகா மாநிலத்தின் பெல்லாரி நகரை சேர்ந்தவர். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலமாக பணியாற்றிய இவர் 10 ஆண்டுகாலம் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, குளிர்கால விடுமுறை முடிந்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் திறக்கப்படுவதால் இன்று முதல் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நாள்தோறும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.