விஜயகாந்த் படிப்படியாக குடிப்பதை குறைத்து வருகிறார். கே.என்.நேரு கிண்டல்

விஜயகாந்த் படிப்படியாகத்தான் குடிப்பதை குறைத்து வருகிறார். கே.என்.நேரு கிண்டல்

kn nehruதமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பூரண மதுவிலக்கு வேண்டும் என இதுவரை போராடி வந்த நிலையில் தற்போது ஒருவேளை மதுவிலக்கு அறிவிக்கப்பட்டால், அந்த பெருமையை யார் யாரெல்லாம் பங்கிட்டு கொள்வது என்பதில் இப்போது முதலே சண்டை போட தயாராகிவிட்டது. மேலும் மதுவிலக்கு போராட்டத்தில் நாங்கள்தான் முன்னின்று செயல்பட்டோம் என்பதை நிரூபிப்பதில்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் அக்கறை செலுத்து வருகிறது. எனவே மதுவிலக்கு போராட்டம் என்பது அரசை விமர்சனம் செய்வது என்ற நிலை மாறி தற்போது எதிர்க்கட்சிகளே ஒருவரை ஒருவர் குறைகூறி கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இதை நிரூபிப்பதுபோல் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு நேற்று விஜயகாந்த் குறித்து ஒரு அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.

கே.என்.நேரு கூறியது இதுதான்: கடந்த நான்கு வருடமாக மதுவை ஒழிக்க வேண்டும் என பாமக, தமிழருவி மணியன் உள்ளிட்ட எத்தனையோ பேர் குரல் கொடுத்து வந்தார்கள். ஆனால் கடந்த ஜூலை 21ஆம் தேதி தலைவர் கலைஞர் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அறிவித்தார். அப்படி அறிவித்தவுடன் இந்த அறிவு ஜீவிகள் தையோ தக்கா என குதிக்கிறார்கள். ஏதோ தி.மு.க.தான் மதுகொள்கையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதைபோல் சொல்லுகிறார்கள்.

உண்மையில், 1937ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த மூதறிஞர் ராஜாஜி ஆட்சியில், சில இடங்களில் மட்டும்தான் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. 1948ல் ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்தபோது தமிழகம் முழுக்க மதுவிலக்கை அமுல்படுத்தினார். பிறகு 1971ஆம் ஆண்டு தமிழக அரசின் நிதி நிலைமை சரியில்லை எனும் நிலை வரவே, தலைவர் கலைஞர் மதுவிற்பனையை அமல்படுத்தினார். அடுத்து அரசின் நிலைமை சரியானதும் தலைவர் கலைஞரே 1974ஆம் ஆண்டு மதுவிலக்கை அமல்படுத்திவிட்டார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர். தனது ஆட்சிக்காலத்தில் 1981ஆம் ஆண்டு ,மது விலக்கை ரத்து செய்தார். கள்ளுக்கடை, சாராயக்கடை அ.தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்டது.

2006 முதல் 2011 வரை மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்தவர் கலைஞர். நமது ஆட்சிக் காலத்தில் 2009க்கு பிறகு புதிதாக டாஸ்மாக் கடைகள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் தெருவுக்கு தெரு, பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்து மதுக்கடைகள் உருவானது ஜெயலலிதா ஆட்சியில்தான். டாஸ்மாக் கடைகளை அதிகாரிகளை வைத்து நடத்துவதும் ஜெயலலிதா ஆட்சியில்தான் அறிமுகமானது. 7000 டாஸ்மாக் மதுக்கடைகள், 4500 பார்களை கொண்டு வந்தது ஜெயலலிதாவின் ஆட்சியில்தான்.

எனவே கலைஞர் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மது விலக்கை அமல்படுத்துவார் என்கிறோம். அவர் சொன்னதை செய்யக் கூடியவர். அதனால்தான் இன்று மதுக்கடைக்கு எதிரான போராட்டம் மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. கலைஞரின் அறிவிப்பு ஜெயலலிதாவை யோசிக்க வைத்துள்ளது. தனியார் வசமிருந்த சாராயக்கடைகளை அரசு ஏற்று நடத்தி, டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுக்க ஆரம்பித்தது ஜெயலலிதாதான். அதைவிட்டுவிட்டு கலைஞர்தான் தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தியதைபோல் குதிக்கிறார்கள்.
 

இதில் ப.சிதம்பரம், தி.மு.க மதுவிலக்கை பற்றி பேசலாமா என சொல்லியிருக்கிறார். 15 வருடம் உதயசூரியனால் அமைச்சர் பதவியை அனுபவித்தவர் சிதம்பரம். இவர்களுக்கு எல்லாம் கலைஞர் மதுவிலக்கை பற்றி சொல்லிவிட்டதுதான் அதிர்ச்சியாக உள்ளது. விஜயகாந்த் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க சொல்லி வருகிறார். அவரும் படிப்படியாகத்தான் குடிப்பதை குறைத்து வருகிறார் போல. தலைவர் கலைஞர் சரியாக யோசித்து அறிவித்துள்ளார். சொன்னதை செய்வார் கலைஞர். அவர் அறிவித்தபிறகுதான் தமிழகத்தில் மதுவிலக்குக்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

இன்னும் ஆறு மாதத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம். இப்போது , வரும் 15ஆம் தேதி மதுக்கடைகளை அரசு குறைப்பதாக அறிவித்தாலும் அதற்கு திமுகதான் காரணம். மதுவிலக்கை அமல்படுத்தும் புரட்சி நமக்கு புதிதல்ல. நிச்சயம் அடுத்தது திமுக ஆட்சிதான். கலைஞர் அல்லது அவர் வழிநடக்கும் தளபதி ஸ்டாலின் நிச்சயம் மதுவிலக்கை அமல்படுத்துவார்.. இது உறுதி” என்றார்.

Leave a Reply