தமிழக மீனவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று கூறிய சுப்பிரமணிய சாமியை தமிழ்நாட்டில் நுழைய விடக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
நேற்று முன் தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழக மீனவர்களை விடுவித்துவிட்டு, அவர்களுடைய படகுகளை கைப்பற்றிக்கொள்ள இலங்கை அரசுக்கு தான் ஆலோசனை கூறியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்து திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை இன்று காலை வெளியிட்டுள்ளார்.
கி.வீரமணியின் அறிக்கையில், “தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமே மீன்பிடித் தொழிலாகும். அவர்கள் கடலில் சென்று தம் தொழிலை மிகப் பெரிய சூறாவளி, கடல் சீற்றம் – இவைகளை யெல்லாம் பொருட்படுத்தாது, தம் வாழ்வைப் பணயம் வைத்து மேற்கொண்டு வரும் இத்தொழிலையே செய்ய இயலாத வகையில், சிங்களக் கப்பற்படையினராலும், ஆதரவு காட்ட வேண்டிய நமது கடலோரக் கப்பற் படையினராலும் பல்வேறு இடையூறுகளையும் இடையறாது சந்தித்து வருகின்ற அவலம் அன்றாடத் தொடர் கதையாகியுள்ளது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியால் சாதிக்க முடியாததை தாம் சாதித்துக் காட்டப் போவதாக மார்தட்டிய பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், எந்தப் பெரிய மாறுதலும் இன்றி அவர்களது வேதனையான வாழ்வுக்கான கெடுபிடிகளும், சிறை வாசங்களும், படகுப் பறிப்புகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஒரு சிலரை விடுதலை செய்து வித்தை காட்டியது இராஜபக்சே அரசு.
இந்த நிலையில் தமிழ் இன விரோதி சுப்பிரமணிய சுவாமி, பா.ஜ.க.வுக்குள் புகுந்து கொண்டு தான்தான் ஏதோ இலங்கை அதிபர் ராஜபக்சேவையே வழி நடத்துபவர்போல பீற்றிக் கொள்வதோடு, பகிரங்கமாக மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசியும், பேட்டி கொடுத்தும் வருகிறார். இவருக்கு மத்திய ஆட்சியில் அளிக்கப் பட்டுள்ள அதிகாரம் – தகுதி என்ன என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கையின் மீன் வளத்தைச் சுரண்டுவதாகவும், அவர்களின் படகுகளை (61 படகுகள்) இலங்கை அரசு அவர்களிடம் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்றும் தான்தான் ராஜபக்சே அரசுக்குக் கூறியதாகவும், இவர்கள் கொழுத்த பணக்காரர்கள் என்றும் ஏதோ வாயில் வந்தபடி உளறிக் கொட்டியுள்ளார். இதை பிரதமர் மோடியும், வெளி உறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜும், அமைச்சரவையில் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டுப் பிஜேபி தலைவர் சொல்லுவது எனக்கு ஒரு பொருட்டல்ல; மத்திய அமைச்சர் யாராவது அப்படி சொல்லியிருக்கிறார்களா என்று ஆணவத்தோடு பதில் சொல்லியுள்ளார் இந்த சாமி (தமிழ்நாடு பிஜேபியின் புதிய தலைவர் இதில் இழையோடும் உணர்வைப் புரிந்து கொண்டால் சரி!) அப்படி இருக்கையில், மத்திய அரசு சு.சுவாமிகளின் இந்த அடாவடித்தன அகம்பாவப் பேச்சுகளைக் கேட்டு சும்மா இருக்கலாமா?
மாநில அரசு இந்தப் பேர்வழியை தமிழ்நாட்டுக்குள்ளே வர அனுமதிக்கவே கூடாது. மீனவர்களின் கொதிப்பும், கொந்தளிப்பும் பாய்ந்தால் அது சட்டம், ஒழுங்கு கெட வழி வகுத்து விடாதா? அதுபோலவே மத்திய அரசும் விரைவில் இவரால் ஏற்படும் தலைவலி, திருகு வலிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கலாமா?
மக்கள் எதிர்ப்பு கண்டு பயந்துதானே தனக்கு இசட் பிரிவு பாதுகாப்புக் கேட்டுப் பெற்றுள்ளார் இந்த சூராதி சூரர்? தமிழ்நாட்டில் எங்கும் நுழைய இத்தகைய தமிழ் இன விரோதிகளை அனுமதிக்கவே கூடாது. இராஜபக்சேவின் ஏஜண்ட்டுகள் போல் செயல்படும் இத்தகையவர்களை ஒருபோதும் தமிழ் மண்ணும், மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது உறுதி” எனக் கூறியுள்ளார்.