காட்டிலிருந்து விறகுகளை வெட்டி சிறு கடைகளுக்கு விற்று பொழப்பு நடத்தி வருகிறார் விதார்த். இவர் டீக்கடை வைத்திருக்கும் தம்பி ராமையாவின் மகளான சம்ஸ்கிருதியை காதலித்து வருகிறார். இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். விதார்த்திடம் ஊரில் உள்ள சந்தன மர தரகர் ஒருவர், காட்டில் உள்ள சந்தன மரங்களை வெட்டித் தருமாறு கேட்கிறார்.
இதற்கு விதார்த் உயிர் வாழ்வதற்கு காட்டில் இருந்து எது வேண்டும் என்றாலும் எடுப்போம். ஆனால் வசதியாக வாழ்வதற்காக ஒரு செடி கூட அழிக்க மாட்டோம் என்று கூறி அவரை விரட்டி அனுப்புகிறார். விதார்த்தின் நண்பர் முத்துகுமார். இவர் எப்படியாவது வனத்துறை அதிகாரியாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். படித்த இளைஞரான இவர் வனத்துறை அதிகாரி ஆவதற்கு தகுதியிருந்தும் பணம் கேட்பதால் வேலை கிடைக்காமல் போகிறது. இதனால் விதார்த்துடன் இணைந்து விறகு வெட்டி வருகிறார்.
ஒருநாள் பணத்திற்காக லாரியில் சந்தன மரங்களை கடத்துகிறார் முத்துகுமார். அப்போது வனத்துறை அதிகாரியிடம் மாட்டிக் கொள்கிறார். அதிகாரியிடம் நான் வனத்துறை அதிகாரி வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். நான் மாட்டிக்கொண்டால் அதிகாரி ஆக முடியாது என்று கூறுகிறார். அதற்கு அவர் உனக்கு பதில் வேற யாரையாவது சொல் அவர்களை பிடித்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார்.
உடனே முத்துகுமார் தன் நிலைமையை விதார்த்திடம் சொல்கிறார். முதலில் இதை மறுக்கும் விதார்த் பிறகு நண்பனுக்காக பழியை ஏற்று ஜெயிலுக்கு செல்கிறார். முத்துகுமார் இதை தவறாக பயன்படுத்தி விதார்த் தான் உண்மையான குற்றவாளி என்று சித்தரித்து அவரை பிடித்து கொடுத்ததாக நற்பெயரை ஏற்படுத்திக் கொள்கிறார். இதனால் உயர் அதிகாரியான நரேனுக்கு முத்துகுமாரை பிடித்து போக இவன் உண்மையானவன் என்று எண்ணி அவனுக்கு இன்பார்மர் வேலை கொடுக்கிறார்.
பிறகு முத்துகுமாருக்கு வனத்துறை அதிகாரியாக வேலை கிடைக்கிறது. வேலையை பெற்றுக் கொண்ட முத்துகுமார், சந்தன மர புரோக்கருடன் இணைந்து காட்டில் உள்ள சந்தன மரங்களை வெட்டி பணம் சம்பாதிக்கிறான். மேலும் காட்டில் உள்ள மலைவாழ் மக்களை விரட்டியடிக்க திட்டம் போடுகிறான். இந்த விஷயம் ஜெயிலில் இருக்கும் விதார்த்திற்கு தெரியவருகிறது.
ஜெயில் விதார்த்திற்கு போராளியான சமுத்திரகனியுடன் பழக்கம் ஏற்படுகிறது. இவர் தன் பேச்சால் காடுகளின் நன்மையையும், காடுகள் நம் சொத்து அதை விட்டுவிடக் கூடாது என்று அறிவுரைகளை கூறி விதார்த்திற்கு ஊக்கம் கொடுக்கிறார்.
இதைகேட்ட விதார்த் ஜெயிலிருந்து வந்து முத்துகுமாரின் திட்டத்தை தடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பிற்கு தீனி போட்டிருக்கிறார். காட்டில் விறகு வெட்டி பிழைக்கும் இளைஞன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சம்ஸ்கிருதி அழகாக இருக்கிறார். பல காட்சிகளில் அருமையான நடிப்பை பதிவு செய்துள்ளார்.
சிறைச்சாலையில் புரட்சிகரமாக பேசி ரசிகர்களின் ஆதரவை அள்ளுகிறார் சமுத்திரகனி. இவரது கதாபாத்திரம் கம்பீரத்தின் உச்சமாக அமைந்திருப்பதுடன், பேசும் வசனங்களும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. தன் கதாபத்திரத்தில் உயிரோட்டத்துடன் நடித்து அசத்தியிருக்கிறார் சமுத்திரகனி. நண்பராக நடித்திருக்கும் முத்துக்குமார் துரோகி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
முதல் படத்திலேயே சமூக அக்கறையுடன் காடுகளை அழிக்க கூடாது என்ற கருத்தை அழுத்தமாக சொல்ல வந்த இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கத்தை வெகுவாக பாராட்டலாம். இவரை போன்ற இயக்குனர்களை தமிழ் சினிமா தாங்கி பிடிக்கவேண்டும். கதைக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து அதற்கு தகுந்தவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெற்றிகண்டிருக்கிறார் இயக்குனர்.
கே இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். காடுகளை அருமையாக நம் கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘காடு’ கவனிக்க வேண்டும்.