இந்திய ராணுவத்தை கேவலப்படுத்திய மோகன் பகவத்துக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்: கனிமொழி
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டம் ஒன்றில் பேசியபோது, இந்தியாவுக்கு ஒரு ஆபத்து என்றால் மூன்றே நாட்களில் போருக்கு ஆயத்தமாகும் வல்லமை படைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் என்று பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இவருடைய பேச்சுக்கு மத்திய அரசு உடனே பதிலளிக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
கனிமொழி இதுகுறித்து மேலும் பேசியபோது, ‘ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத் தனது பேச்சின்போது 3 நாள்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போருக்கு ஆயத்தமாகும் வல்லமையுடன் உள்ளார்கள் என்று கூறியுள்ளார். இது, இந்திய ராணுவத்தை கேவலப்படுத்தும் செயலாகும். அவர் ராணுவத்தை உருவாக்குவது இந்தியாவிற்குள்ளேயே போரிடுவதற்காகவா?
எனவே, மோகன் பாகவத்தின் கருத்துக்கு மத்திய அரசு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
ஆனால் மோகன் பகவத் இந்த சர்ச்சை கருத்தை கூறி ஒருசில நாட்கள் ஆகிவிட்டபோதிலும் மத்திய அரசு தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.