மதுரையில் நாடகக்கம்பெனி நடத்தி வரும் நாசரிடம் சித்தார்த் மற்றும் பிருத்விராஜ் ஆகிய இருவரும் சிறுவயது முதல் நடித்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நாடக கம்பெனியில் முக்கிய வேடமான ராஜபாட் என்ற வேடத்தில் நடித்த பொன்வண்ணன், நாசரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்கிறார்.
எனவே அடுத்த ராஜபாட் ஆக யாரை தேர்வு செய்யலாம் என நாசர் நினைத்த நேரத்தில் சித்தார்த் மற்றும் பிருத்விராஜ் இருவருக்கும் தேர்வு வைக்கின்றார். இந்த தேர்வில் சித்தார்த் வென்று ராஜபாட் ஆகிறார். சிறுவயது முதலே ராஜபாட் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்த பிருத்விராஜுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருகிறது.
இதனிடையே வேதிகா தனது தாயார் குயிலியுடன் இந்த நாடகக்கம்பெனியில் சேருகிறார். பிருத்விராஜ் வேதிகாவை ஒருதலையாக காதலிக்கிறார். வேதிகா சித்தார்த்தை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் சித்தார்த் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார்.
தனக்கு கிடைக்க வேண்டிய ராஜபாட் பதவி சித்தார்த்துக்கு சென்றதால் பொறாமையால் பிருத்விராஜ் கோபம் கொள்கிறார். இதனால் நண்பர்களுக்குள் மனக்கசப்பு உருவாகிறது. இவர்களுக்கு இடையே உள்ள பனிப்போர் என்ன ஆனது, வேதிகா யாரை கைப்பிடித்தார் என்பதுதான் மீதி கதை.
படத்தின் நிஜமான நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான். இருவர் படத்திற்கு பின்னர் ரஹ்மானுக்கு கிடைத்த வித்தியாசமான கதைக்களம். பின்னணி இசையிலும், பாடல்களில் புகுந்து விளையாடியிருக்கின்றார். படத்தின் மிகப்பெரிய பிளஸ் ரஹ்மானின் இசைதான்.
அடுத்து வசந்தபாலனின் தெளிவான திரைக்கதை. கமர்ஷியல் அம்சங்களுக்கு இடம் கொடுக்காமல் சொல்ல வந்த விஷயத்தை மிகத்தெளிவான திரைக்கதையில் கூறியுள்ளார். ஜெயமோகனின் வசனமும் அவருக்கு பெருமளவு கைகொடுத்துள்ளது.
அடுத்ததாக பிருத்விராஜின் ஆக்ரோஷமான நடிப்பு. நண்பனாக இருந்தாலும் ராஜபாட் வேடம் தனக்கு கிடைக்காமல் சித்தார்த்துக்கு கிடைத்ததால் பொங்கி பொறுமும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அபாரம்.
இதுவரை சாக்லேட் பாயாக பார்த்த சித்தார்த்தா இது என்பது போல நல்ல நடிப்பு. ஜிகிர்தண்டா, காவியத்தலைவன் என சித்தார்த்தின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே வருகிறது.
பரதேசி படத்திற்கு பின்னர் வேதிகாவுக்கு கிடைத்த வெயிட்டான கேரக்டர். அவரும் தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.
தம்பி ராமைய்யா, பொன்வண்ணன், நாசர், குயிலி ஆகியோர்களும் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர்.
மொத்தத்தில் காவியம் படைத்துள்ளது காவியத்தலைவன்.