இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், தங்களை வாழ வைக்கும் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நாகையில் மீனவ பெண்கள், சமுத்திர ராஜ வழிபாடு செய்தனர். சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து காக்க வேண்டும்; உலக மக்களிடையே அமைதி நிலவ வேண்டும்; கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தங்களின் குடும்பத்தினர் பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டும் என வேண்டியும்; தங்களுக்கு வாழ்வளிக்கும் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நாகையில், அக்கரைப்பேட்டை மீனவப் பெண்கள் நேற்று சமுத்திர ராஜ வழிபாடு செய்தனர். இந்நிகழ்வையொட்டி, அக்கரைப்பேட்டை முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்களும், மீனவப் பெண்களும், ஊர்வலமாக கடற்கரைக்கு சென்றனர். கடலில் பால் ஊற்றி, பூஜை பொருட்கள், பழங்கள் மற்றும் மங்களப் பொருட்களை கடலில் விட்டு, நீராடி, கடல் அன்னையை வழிபட்டனர். அக்கரைப்பேட்டை மீனவர்கள் ஆண்டுதோறும், சமுத்திர ராஜ வழிபாட்டினை விமரிசையாக நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.