தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. மூலை அனுமாரின் வாலில் சனிபகவான் உள்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். அமாவாசைதோறும் மூலை அனுமாருக்கு 18 அகல் தீபம் ஏற்றி, 18 லிட்டர் பாலினால் அபிஷேகம் செய்து, 18 சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
தொடர்ந்து 18 அமாவாசைகள் மூலை அனுமாருக்கு தேங்காய் துருவல் அபிஷேகம் செய்து வழிபட்டால் வறுமை மற்றும் கடன் தொல்லை நிவர்த்தியாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வருகிற 11-ந்தேதி(புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு லட்ச ராமநாம ஜெபத்துடன் ஐப்பசி அமாவாசை சிறப்புவழிபாடு தொடங்குகிறது.
ஐப்பசி அமாவாசை அன்று கேதாரி கவுரி விரதம், லட்சுமி குபேர பூஜை மேற்கொள்பவர்கள் மூலை அனுமாரை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முன்னதாக வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தீபாவளி அன்று காலை 9 மணிக்கு மூலை அனுமாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.