[carousel ids=”61184,61185,61186,61188,61189,61190,61191,61192″]
தென்பொன்பரப்பி எனும் சிற்றூரில் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்றுள்ளது… .இறைவன் சொர்ணபுரீஸ்வரர் அம்பாள் சுவர்ணாம்பிகை என்ற திருநாமத்தில் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இந்த ஆலயத்தின் மூலவரான ஷோடச லிங்கம் எல்லா சித்தர்களுக்கும் மூத்தவரான காகபுஜண்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும் . காகபுஜண்டர் பதினாறு ஆண்டுகள் கடுந்தவம் மேற்கொண்டதன் விளைவாக தவத்திற்கு மெச்சிய சிவபெருமான் ஒரு பிரதோஷ வேளையில் 16 முகங்களை கொண்ட ஷோடச லிங்கமாக அவருக்குக் காட்சி தந்தார்.
அதே போன்ற சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதினார். அதன் காரணமாகவே காகபுஜண்டர் இங்கு சிவலிங்கத்தை நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ..இக்கோவிலில் ஜீவசமாதியும் அடைந்தார். லிங்கமானது சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
இந்த சிவாலயம் எழுப்பப்பட்ட காலக்கட்டத்தில் தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னன் வானகோவராயன் ஆவான் . மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் ஒரு அழகிய சிவாலயத்தை கலை நுணுக்கத்தோடு எழுப்பினான். அப்போது ஊரில் செல்வம் கொழித்து, பொன்னும் பொருளும் அளவற்று புழங்கியதால் இவ்வூருக்கு பொன் பரப்பி என்ற பெயர் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வானகோவராயனுக்கு சோதனை வந்தது. கப்பம் கட்டாததால் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் படையெடுக்கும் நோக்கத்தில் அவனைத் தாக்க வந்தனர். வானகோவராயன் குறுநில மன்னராக இருந்தபோதும் தைரியத்தில் குறைவில்லாதவன். தான் வணங்கும் சொர்ணபுரீஸ்வரரை மனமுருக வணங்கி போருக்குப் புறப்பட்டான். ஈசனின் முழு அருளையும் பெற்ற மகிழ்ச்சியில் போர் முரசு கொட்டிச் சென்ற மன்னனை பார்த்த மாத்திரத்தில் மூவேந்தர்களும் தம் அரசமுடிகளை கழற்றி வைத்துவிட்டு திரும்பினர். அதனாலேயே இந்த இடம் மும்முடி என்று அழைக்கப்படுகிறது.
ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம்.இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
மேலும் ராகு கால வேளையில் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.
இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.
காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார்.
இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. “பால நந்தி’ என்பது இதன் திருநாமம். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. காண கண் கோடி வேண்டும் ..வந்து பாருங்கள் .
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கே ஒரு கி.மீ. தூரத்தில் சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி-606 201, விழுப்புரம் மாவட்டம். தொடர்புக்கு – 9894667934.