அஜீத், விஜய், சூர்யா படங்களுக்கு இணையாக விளம்பரம் செய்யப்பட்டு பயங்கரமான பில்டப்புடன் வெளியாகியிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ சராசரி ரசிகர்களை திருப்திபடுத்தியதா? என்று கேட்டால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வைத்துள்ளது இந்த காக்கி சட்டை.
கடந்த இருபது வருடங்களாக திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த அஜீத், விஜய் இரண்டு நடிகர்களுமே சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற இன்னும் நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலையில் நான்கே நான்கு வெற்றி படங்கள் கொடுத்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் செய்யும் சிவகார்த்திகேயனுக்கு இந்த பில்டப் தேவைதானா? என்று அவரது ரசிகர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எதிர்நீச்சல் திரைப்படம் போலவே இரண்டரை மணி நேர திரைப்படத்தில் இரண்டு மணி நேரம் காமெடி காட்சிகளாக படத்தை நகர்த்திவிட்டு கடைசி அரைமணி நேரம் மட்டும் திடீரென ஹீரோ சிவகார்த்திகேயன் சீரியஸ் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார்.
தமிழகத்தில் தற்போது பிரபலமாகி வரும் மூளைச்சாவு அடைந்தவர்கள் தானம் செய்யும் உடலுறுப்புகள் குறித்த கதைதான் கடைசி அரைமணி நேரத்தில் கொஞ்சம் வித்தியாசமாகவும் கொஞ்சம் காமெடியாகவும் கூறப்பட்டுள்ளது.
வில்லன் கோஷ்டிகள் செய்யும் உடலுறுப்பு தான வியாபாரத்தை சிட்டி கமிஷனரே கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் சாதாரண கான்ஸ்டபிள் சிவகார்த்திகேயன் வில்லனுக்கு எதிராக காய்கள் நகர்த்தி வில்லனின் கொட்டத்தை அடக்குவதுதான் கதை.
சிவகார்த்திகேயன் வழக்கம்போல முதல்பாதி காமெடி மற்றும் ஸ்ரீதிவ்யாவுடன் அசடு வழியும் காதல், பின்பாதியில் காமெடி போலீஸாருடன் சேர்ந்து கொண்டு சீரியஸ் ஹிரோயிசம் செய்துள்ளார். வில்லனை எதிர்த்து முறைப்பதில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான நடிப்பை பதிவு செய்திருக்கின்றார். இருப்பினும் படத்திற்கு படம் வித்தியாசமாக ஏதாவது செய்தால்தான் பீல்டில் நிற்க முடியும் என அவருக்கு யாராவது ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
படத்தின் ஒரே ஆறுதல் ஸ்ரீதிவ்யா. நர்ஸாகவும், குடும்பப்பாங்கான பெண்ணாகவும் வந்து போகிறார்.. இவருடைய கேரக்டர் கதையோடும் கொஞ்சம் கலந்திருப்பது ஒரு ஆறுதல். கண்டிப்பாக இவர் ஒருநாள் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வருவார்.
இந்தி வில்லன் விஜய் ராஸ், நம்மூர் ரகுவரனை ஞாபகப்படுத்தினாலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள குற்றங்கள் செய்யும் ஒரு வில்லன் பல நேரங்களில் கோமாளித்தனமான செய்கைகள் செய்வது எரிச்சலை வரவழைக்கிறது. ஒரு படத்தில் புத்திசாலியான வில்லன்கள் இருந்தால்தான் ஹீரோயிஸத்த்துக்கு மதிப்பு இருக்கும். அதற்கு சரியான உதாரணம் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’. ஆனால் இந்த படத்தில் உலக அளவில் கிரிமினல் தொழில் செய்து வரும் வில்லன், செய்யும் கோமாளித்தனம் சகிக்கவில்லை. இவ்வளவு பெரிய வில்லனை மயில்சாமி, மனோபாலா போன்றவர்கள் கூட ஏமாற்றும்படியான காட்சிகள் படத்தில் இருப்பது பெரிய மைனஸ்.
அனிருத்தின் பின்னணி இசையில் ஒரே இரைச்சல். பின்னணி இசையை பல ஆங்கில படங்களில் கேட்ட ஞாபகம் இருக்கின்றது. இணையதளவாசிகள் இன்னும் சில நாட்களில் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து ஸ்டேட்டஸ் போடுவார்கள் என்பது உறுதி.
பட்டுக்கோட்டை பிரபாகரின் நச் வசனங்கள் ஆங்காங்கே ஜொலிக்கின்றது. அவருடைய நாவலைப்போலவே அவர் எழுதியுள்ள நக்கலான வசனங்கள் படத்திற்கு ஆறுதல்.
இயக்குனர் துரை செந்தில்குமார் எதிர்நீச்சல் பாணியிலேயே இந்த படத்தையும் நகர்த்தியுள்ளார். அவர் அடுத்த படத்திலாவது தன்னுடைய பாணியை மாற்றிக்கொள்வார் என நம்புவோம். கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமா ஹீரோக்கள் செய்து வந்த போலீஸ் கதையில் இருந்து கொஞ்சம் கூட வித்தியாசமில்லாத திரைக்கதையை கொடுத்துள்ளது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
இந்த படத்திற்கு பின்னர்தான் தன்னுடைய சம்பளத்தை நிர்ணயம் செய்யப்போவதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதேபோல் நான்கு படம் கொடுத்தால் அப்புறம் அவர் சம்பளத்தை பற்றி பேசவேண்டிய வேலையே இருக்காது.
காக்கி சட்டை. புதுமையில்லாத கசங்கிய சட்டை.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1LRgxxc” standard=”http://www.youtube.com/v/twH-ahD9bnk?fs=1″ vars=”ytid=twH-ahD9bnk&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep2773″ /]