குஜராத் அணு உலையில் திடீர் கசிவு. அவசரநிலை பிரகடனம்

குஜராத் அணு உலையில் திடீர் கசிவு. அவசரநிலை பிரகடனம்
atomic
குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணுமின் நிலையத்தில் கசுவு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அணு உலையில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் மின் தேவைகளை பெரும்பாலும் பூர்த்தி செய்வது கக்ரபார் அணுமின் நிலையம். இதன் முதல் அணு உலையில் இருந்து திடீரென தண்ணீர் கசிந்ததால் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து கக்ரபார் அணுமின் நிலைய இயக்குநர் எல்.கே.ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியபோது, முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில் கசிவு இருப்‌பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உடனே அணுஉலை மூடப்பட்டதாகவும் கூறினார். மேலும் இந்த கசிவு காரணமாக அணுக் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை என்றும் குளிர்விப்பானுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதனால் அணுமின் நிலைய ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஊழியர்கள் அனைவரும் உடனே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், இருப்பினும் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்பதை அறிய பரிசோதனை செய்தபின்னரே அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கசிவு குறித்து இந்திய அணுசக்தி மின் கழகம் அதிகாரி கூறியபோது ”கசிவு ஏற்பட்ட அணு உலை பாதுகாப்பாக மூடப்பட்டுவிட்டது. அணு கதிர்வீச்சு வெளியே கசியவில்லை. பாதுகாப்பு பரிசோதனை மற்றும் உபகரணங்கள் பரிசோதிக்க வேண்டி உள்ளதால், கக்ரபார் அணுமின் நிலையத்தில் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. கசிவு ஏற்பட்ட அணு உலை குளிர்ச்சியடைய இன்னும் 24 மணிநேரம் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply