கால்கள் இழந்தும் ஓடுகிறேன்..!

p90ஜெனிதா… காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென முதன்முறையாக அறிவிக்கப்பட்ட செஸ் போட்டியில், வெண்கலப் பதக்கம் பெற்ற திருச்சிப் பெண். இப்போட்டியில் கலந்துகொண்ட முதல் பெண் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர். மூன்று வயதுக்குப் பிறகு போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை செயலிழந்தாலும், துளியும் நம்பிக்கை இழக்காமல் தொட்டிருக்கிறார் இந்த உச்சம்!

 ”பொன்மலைப்பட்டிதான் சொந்த ஊர். ‘இனி நடக்கவே முடியாது’னு டாக்டர்கள் கைய விரிச்சப்ப, என் அப்பா எனக்கு கால்கள் ஆனார். எனக்கு இப்ப 27 வயசு ஆகுது. மூணு வருஷத்துக்கு முன்னவரைக்கும் அப்பா தான் என்னைச் சுமந்தார். அப்புறம், அப்பாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால, ஒரு கையை வெச்சு வீல் சேர்ல இயங்க ஆரம்பிச்சுட்டேன்.

8 வயசு வரைக்கும் பள்ளியில நேரடியா போய் படிச்சேன். அதுக்கப்புறம் வீட்டுல இருந்தே பி.காம். படிச்சேன். காலையில் பாத்ரூம் போயிட்டு ஸ்கூலுக் குப் போனேன்னா, சாயங்காலம் அப்பா வர்ற வரைக்கும் காத்திருப்பேன். செஸ் போட்டிக்கு வெளியிடங்களுக்கு போகும் போது இக்கட்டான நேரங்களில் அப்பா தான் துணையா இருப்பார்!” என்று உருகுகிறார் ஜெனிதா. இவரின் அப்பா, ஒரு தலைமையாசிரியர்.

”அப்பாதான் செஸ்ல எனக்கு முதல் குரு. மூணாவது படிக்கும்போது செஸ் போட்டியில மாவட்ட அளவுல ஜெயிச் சேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு பயிற்சிக்காக அப்பா என்னை வெளியிடங்களுக்கு அனுப்ப, மாவட்ட, மாநில அளவில் வெற்றிகளைக் குவிச்சேன். அப்புறம்தான் பெங்களூருவுல இருக்கிற மாஸ்டர் ராஜா ரவிசங்கர்கிட்ட மூணு மாசத்துக்கு ஒரு தரம் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்! பொதுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி ரெண்டுலயும் கலந்துக்கிறேன்” எனும் ஜெனிதாவின் சாதனைகள், சபாஷ் சொல்ல வைக்கின்றன.

2007ம் ஆண்டு போலந்தில் வெள்ளிக் கோப்பை, செக் குடியரசு நாட்டில் 2009ல் வெண்கலம் மற்றும் 2014ல் தங்கம், இந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்காட்லாந்து, காமன்வெல்த் போட்டியில் வெண்கலம், உலக உடல் ஊனமுற்றோர் தனிநபர் போட்டியில் செப்டம்பரில் தங்கம் என குவித்திருக்கிறார்!

”என்னோட ரோல் மாடல், உலக செஸ் நாயகன் பாபி ஃபிஷர். என்னோட கனவு, கிராண்ட் மாஸ்டராகணும். நிறைய பேருக்கு முன்மாதிரியா இருக்கணும்!” என்கிறார் ஜெனிதா, தன் ஒரு கையால் வீல் சேரை நகர்த்தியவாறு!

Leave a Reply