உங்கள் நிதி வேண்டாம்: யோசனைகளை மட்டும் கூறுங்கள்: ஹார்வர்டு பல்கலையில் கமல் பேச்சு
உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று ஹார்வர்டு பல்கலையில் ஆற்றிய உரையில் பொதுமக்களின் நிதி தனக்கு வேண்டாம் என்றும், தமிழகத்தை முன்னேற்றிட தங்களது மேலான ஆலோசனைகளை மட்டும் தாருங்கள் என்றும் பேசியுள்ளார். இந்த உரையின் முழுவடிவம் இதோ:
பாரம்பரியம், கலாச்சாரம், மூத்தமொழியான தாய்த்தமிழ் கட்டடகலையின் முன்னோடி சமூகநீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி என பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் சிறப்பு கொண்ட தமிழகத்திலிருந்து உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
வெவ்வேறு விதமான கிராமங்களை உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்பதில் எனக்குப் பெருமை உண்டு. ஆனால் தற்போது அங்கே அனைத்தும் சீராக இல்லை, இன்னும் காலம் கடக்கக் கூடாது என்ற தொலைநோக்கோடு உறுதியான குறிக்கோளோடு புத்துலகம் காண வேண்டுமென விரைவில் அரசியல் பயணம் புறப்படவிருக்கிறேன்.
என்னுடைய உண்மையான நோக்கம் சாதாரண நிலையிலுள்ள தமிழகத்தின் நிலையை மாற்றிக் காட்டுவதே ஆகும். ஏன் என்றால் அங்கு அரசியல்வாதிகள், வர்த்தகர்களில் பலர் தெளிவற்ற அணுகுமுறையைக் கொண்டவர்களாக உள்ளனர் எனக் கருதப்படுகிறது.
தமிழகத்திற்கு தக்க அணுகுமுறையோடு கூடிய வழிகாட்டுதல் அவசியமாகிறது. இதை ஒட்டியே எனது நோக்கமும் அமைந்துள்ளது. அங்கு கடைப்பிடிக்கப்படும் சீரற்ற கொள்கைகள் திருத்தப்படுவது முக்கியமாகும்.
குறிப்பாக தமிழகத்தில் அரசியல்வாதிகள் போக்கு மக்கள் நலனில் அக்கறையற்றதாக இருக்கிறது. மாநிலத்தின் மொத்த வருவாய் நிலை பற்றாக்குறையாக உள்ளது. 2016-2017-ஆம் ஆண்டில் அகில் இந்திய நிலையில் தமிழகம் நிதிநிலைப் பற்றாக்குறையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது. இதற்குக் காரணம் அரசின் வீணான செல்வுகள், திட்டமிடாத நிதிச்சுமைகள், தொலைநோக்கோடு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தாத அலட்சியப்போக்கு ஆகியவை ஆகும்.
மேலும் தமிழகத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பற்ற தன்மை நிலவுகிறது. குறிப்பாக பல்லாண்டுகளாக நீர்நிலைகளை சீரமைக்காமல் ஒதுக்கியதால் தண்ணீர்ப் பஞ்சத்தை சந்திக்க வேண்டியுள்ளது. நீர் நிலைகளைத் தூர்வாரி தண்ணீரை சேமித்தாலே நமது தேவைகள் பூர்த்தியாக வாய்ப்புண்டு.
கல்வி, மக்கள்நலன் காத்தல், வேலைவாய்ப்பை உருவாகுதல், அநீதி இழைக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்தல் என்பது உள்ளிட்ட அம்சங்களில் தமிழகம் தன் கடமையைச் சரியாகச் செய்ததா என்பது கேள்விக் குறியே.
இத்தகைய சூழலில் எனது தாயகம் குறித்த எனது கனவை நனவாக்கும் முயற்சியைத் தொடங்கவிருக்கிறேன். இது புதிய பாதையல்ல. மூத்தோர் பலரும் முயற்சித்ததைப் புதிய தலைமுறையோடு இணைந்து வடிவம் கொடுக்க தயாராகி வரும் சூழலில் இங்கு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கிராமங்கள் புதுவடிவமெடுத்தால் அது நாட்டையே மாற்றும், ஒரு நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்கள் சீரமைப்பையே மையமாகக் கொண்டதாகும். இதன் மூலம் தன்னஇறைவு பெற்ற கிராமங்கள் உருவாவது தேசத்தையே மறுகட்டமைப்பு செய்வதாகும் என எனதுவழிகாட்டியும். நாடே போற்றக் கூடிய மாமனிதருமான அண்ணல் காந்தியடிகள் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதை மனதில் ஏந்தி பிப்ரவரி 21-ஆம் தேதி எனது அரசியல் பயணத்தை “நாளை நமதே” என்ற இலக்கோடு தொடங்கவிருக்கிறேன். இதற்கு முன்னோடித் திட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை ஒட்டுமொத்த வளர்ச்சி கொண்டதாக மாற்ற தத்தெடுப்பதை அறிவிக்கவிருக்கிறேன்.
இவ்வாறு தமிழகத்தில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவது இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக அமைய வாய்ப்புள்ளது. வளமிருந்த சமூகக் கட்டமைப்பு உருவாக அனைத்து வசதிகளும் அவசியம். இதற்கான செயல்பாடு மாற்றத்தை நோக்கியே என்ற அணுகுமுறாயோடு இருக்கும்.
ஒவ்வொரு பயணத்திலும் எடுத்து வைக்கும் முதல் அடி மாற்றத்திற்குத் தூண்டுகோலாக அமையும் என்பது என் அனுபவம். கிராமத்தில் தொடங்கி மாநிலத்தை எட்டி பின்னர் காலப்போக்கில் இந்தியாவிற்கு இத்தகைய முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதே எனது நோக்கமாகும்.
இத்தகைய மகத்தான செயல்பாட்டிற்கு உலக நிலையில் பரவியுள்ள தமிழர்கள் தங்கள் ஆதரவை, திட்டங்களை வழிகாட்டுதல்களைத் தெரிவிக்க வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு நான் கூறுவதால் ஏதோ உங்களிடம் நிதி கேட்பதாகக் கருதிவிடாதீர்கள். அதைக் காட்டிலும் மேலான மதிப்புமிகுந்த உங்களின் யோசனைகள், தனித்தன்மை கொண்ட உங்களின் கற்பனைகள் எங்களுக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும். இதையே நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய அரசியல் பயணம் ஹார்வார்டு பல்கலைக்களக மாணவ- மாணவியர் வாழ்த்துகளோடு அவர்கள் அறிவாற்றல் ஆதரவோடு தொடங்கவிருப்பதில் மகிழ்கிறேன்.
உடனடி செயல்பாடே உரிய பயனைத் தரும் என்பது எனது உறுதியான நம்பிக்கை நாற்காலியில் அமர்ந்து அரசியல் பேசுவது அலங்காரமாக இருக்கலாம், அது ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கு உதவாது.
தேர்தல் அரசியல் எங்களை எதிர்நோக்கி உள்ளது, அதன்மூலம் தான் இந்த சமூகத்திற்கான கடமையைச் செய்ய முடியும். செயல்படாத அரசை நம்புவதைக் காட்டிலும் நல்ல அரசை உருவாக்குவது எனது உரிமை என்பதே இன்றையா காலகட்டத்தின் அவசியமாகும்.
இது எனது அரசியல் பயணத்தின் முன்னோட்டப் பேச்சாகும். அடுத்தகட்டமாக எனது மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறேன். என்னை ஒரு செயல்படக் கூடிய நபராகக் கருதி நீங்களெல்லாம் கூர்தீட்ட வேண்டும். தமிழக கிராமங்களுக்கு மறுவடிவம் கொடுக்க உங்கள் அனைவரின் உதவிகள் அவசியம்.
என்னை அரசியல்வாதியாகப் பதிவு செய்யத் தொடங்கி இருக்கிறது, புதிய மாறுதலுக்கு செயல்வடிம் கொடுக்கும் சீர்திருத்தவாதியாகவும் செயல்படுகிறேன். பழம்பெருமை மிக்க எங்கள் தாயகத்தை ஆட்சி செய்ய அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நிர்வாகம், மொழி காத்தலில் முன்னோடியாகத் திகழந்தை இப்போதும் நினைத்து நாம் பெருமைப்படலாம். அவர்கள் விட்டுச் சென்ற உயர்ந்த யோசனைகள், வழிகாட்டு நெறிமுறைகள் இப்பொழுதும் நமக்குப் பயன்படக் கூடியவை. ஆனால் தற்போதைய தலைவர்கள் இதிலிருந்து கற்றுக் கொள்வார்களா என்பது விடையில்லா வினா.
வெற்றி, தோல்விகள் வரலாம். சமூக அரசியல் காலஓட்ட மாற்றத்தில் இவையெல்லாம் நமது செயல்பாட்டிற்கான குறியீடுகளாகும். தொலைநோக்கோடு நான் தொடங்கவிருக்கும் இந்த அரசியல் பயணத்தில் நிறைய கற்றுக் கொள்ளவிருக்கிறேன். என் பயணத்தில் உணைந்து தமிழகத்திற்குப் புது வடிவம் கொடுக்க உதவுவீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன். “நாளை நமதே” என்ற பயணத்தின் முடிவு எதிர்காலத்தில் மாறுபட்ட உயர்ந்தத் தமிழகத்தை நமக்குக் காட்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.