சரியாக திட்டமிட்டால் ஒரு படத்திற்கு 30 நாட்கள் போதும். கமல்

சரியாக திட்டமிட்டால் ஒரு படத்திற்கு 30 நாட்கள் போதும். கமல்
kamal
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கமல், த்ரிஷா, கிஷோர், சம்பத், மதுஷாலினி உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர்களும், விஷால், தனுஷ், கருணாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பிரபல இயக்குனர்கள் கௌதம், அமீர், பாண்டிராஜ் ஆகியோர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் கமல் பேசியதாவது: “இந்தப் படத்தை நாற்பது நாட்களில் எடுத்தார்கள், ஐம்பது நாட்களில் எடுத்தார்கள் என்று ஆளாளுக்கு ஒரு நம்பர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தை இரண்டு மொழிகளில் எடுத்திருக்கிறோம். பெரும்பாலான காட்சிகள் இரண்டுமுறை எடுக்கப்பட்டன.

கார் வருகிற காட்சிதானே ஒருமுறை எடுத்தால் போதும் என்று விடமுடியாது, நம்பர் பிளேட் மாற்றி இன்னொரு முறை எடுக்கவேண்டும், தமிழ்நாட்டு போலிஸ் வேறு தெலுங்கானா போலிஸ் வேறு அதனால் போலிஸ் வருகிற காட்சிகளையும் இரண்டுமுறை எடுக்கவேண்டும்.

அதனால் இரண்டு படங்கள் எடுத்த கணக்காகிவிட்டது. இதை 52 நாட்களில் முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டோம், படத்தை முடித்துப் போட்டுப்பார்த்த பிறகு சில திருத்தங்கள் செய்ததால் மேலும் எட்டுநாட்கள் எடுக்கவேண்டி வந்தது. ஆக மொத்தம் அறுபது நாட்களில் இந்தப்படங்கள் முடிந்துவிட்டன. இரண்டுபடங்கள் அறுபது நாட்களில் என்றால் ஒரு படத்தை முப்பது நாட்களில் முடித்திருக்கிறோம்.

இது சாத்தியமேயில்லை என்று பலர் சொன்னார்கள். நானே 200 நாட்கள் படமெடுத்திருக்கிறேன். சரியாகத் திட்டமிட்டால் அவ்வளவுநாட்கள் தேவையில்லை என்று நான் சொன்னபோது, இந்தக்காலத்தில் அப்படி முடியாது என்று சொன்னார்கள். ஆனால் நாங்கள் சாதித்துக் காட்டியிருக்கிறோம். அதற்கு எங்களுக்குச் சரியான டீம் அமைந்ததுதான் காரணம்.

முன்னிலையில் இருக்கும் 12 பேரை மட்டும் வைத்து ஒருபடத்தை எடுத்துவிடமுடியாது. டிபன் கொடுக்கிறவர் சமைக்கிறவர், கார் டிரைவர் உட்பட யூனிட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள்வேலைகளைச் சரியாகச் செய்தால்தான் இது நடக்கும். எனக்கு அப்படி ஒரு பிரமாதமான டீம் அமைந்துவிட்டது. அந்த டீமின் வெற்றிதான் இந்தப்படம்.

இந்தப்படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தபோதும் எல்லோரும் ரிகர்சலில் கலந்து கொண்டார்கள். அவர்கள் தாமாகவே முன்வந்து அப்படிச் செய்ததும் படத்தைச் சீக்கிரமாக முடிக்க ஒரு காரணம். எனவே இவர்கள் நடிக்கும் எல்லாப் படங்களிலும் இப்படியே செய்யக்கடவது என்று சொல்லிக்கொள்கிறேன்

இவ்வாறு கமல் பேசினார்.

Leave a Reply