நர்மதா நதி விவகாரம் ஞாபகம் இருக்கின்றதா? பிரதமருக்கு கமல் கடிதம்

நர்மதா நதி விவகாரம் ஞாபகம் இருக்கின்றதா? பிரதமருக்கு கமல் கடிதம்

காவிரி விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில் நர்மதா நதி நீர் விவகாரத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து கமல் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

”அக்கறையுள்ள தமிழனாகவும், இந்தியக் குடிமகனாகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியின் விளைவாகத் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை தாங்கள் அறிவீர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறியதை எதிர்த்து நீதி கேட்டு நடக்கும் போராட்டமே இது. தீர்ப்பைச் சொல்லியதன் மூலம் தனது அரசியல் சாசனப் பங்கை உச்சநீதிமன்றம் நிறைவேற்றிவிட்டது. அந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் சாசனக் கடமை.

நாட்டின் பிரதமராக உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சொல்லிலும், செயலிலும் முழுமையாக நிறைவேற்றத் தேவையான பணிகளைச் செய்ய வேண்டியது உங்கள் கடமை.

இதற்கு முன்பு குஜராத் மாநில முதல்வராக, நர்மதா நதியின் நீரை நான்கு மாநிலங்களுக்கு இடையில், வாரியத்தின் மூலம் பகிர்ந்துகொண்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. இப்போது இந்திய நாட்டின் பிரதமராக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சொல்லிலும் செயலிலும் முழுமையாக நிறைவேற்றத் தேவையான பணிகளைச் செய்ய வேண்டியது உங்கள் கடமை.

தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும், கர்நாடகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாகவும், அதில் உங்கள் கட்சிக்கு இருக்கும் ‘அக்கறை’ காரணமாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என நம்பத் தொடங்கிவிட்டனர். இந்த நாட்டின் பிரதமராக அப்படி ஒரு தவறு நடைபெறவில்லை என்பதை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதன் மூலம் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை.

தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையை உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழியாகப் பெற வேண்டிய காவிரி நதிநீர்ப் பங்கீட்டை உறுதி செய்வதும் உங்கள் கடமை.

உங்களின் உடனடி செயல்பாட்டை எதிர்நோக்குகிறேன்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply