கமல்-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு. ஆம் ஆத்மியின் தமிழக தலைவர் ஆகிறாரா?
கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் ஒரு மாநிலத்தின் ஆட்சியை பிடித்து சாதனை செய்தவர் என்ற பெருமை அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு உண்டு. காங்கிரஸ், பாரதிய ஜனதா என இரண்டு தேசிய கட்சிகளை தோற்கடித்து ஆட்சியை பிடித்ததை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே ஆச்சரியமாக பார்த்தது.
இந்நிலையில் தனது ஆம் ஆத்மி கட்சியை டெல்லியையும் தாண்டி பல மாநிலங்களில் பரப்ப அரவிந்த கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வலுவான, பிரபல தலைவரை தேர்வு செய்ய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார். கமல்ஹாசன் தனது நற்பணி மன்றத்தின் மூலம் பல சமூக சேவைகள் செய்து வருகிறார். மேலும் பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தமிழக தூதுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் டெல்லி முதல்வரை அவர் சந்தித்துள்ளதால் அவருக்கு ஆம் ஆத்மியின் தமிழக தலைமை பதவி கொடுக்கப்படுமா? என்பது குறித்து செய்திகள் வெளிவருகின்றது. ஆனால் கமல்ஹாசனுக்கு அரசியல் என்றாலே ஆகாது. இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது மட்டுமே என்றும் கூறப்படுகிறது. இவற்றில் எது உண்மை என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.