கோட்டையை நோக்கி புறப்படுவோம்: திருமண விழாவில் கமல் சூளுரை
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் கமல், ரஜினி ஆகிய இருவருமே அரசியல் பாதையை நோக்கி திரும்பியுள்ளனர். குறிப்பாக கமலுக்கு கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் எதுவும் இல்லாததால் கிட்டத்தட்ட முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்.
முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரை டுவிட்டரில் காய்ச்சி எடுத்து வந்த கமல் இன்று ஒரு திருமண மேடையிலும் அரசியல் பேசியுள்ளார். அரசியலை டுவிட்டரில் ஆரம்பித்தால் என்ன? கோவையில் ஆரம்பித்தால் என்ன? என்று தன்னை டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்து வருவதாக கூறுபவர்களுக்கு பதிலடி கொடுத்த கமல், அரசியல் பாதையை தொடங்கியது தொடங்கியதுதான். இனி அதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று சூளுரைத்தார்.
மேலும் இன்றைய அரசியல் சூழ்நிலையை மாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டதாகவும், இதை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என்றும் கூறிய கமல் அரசியலில் அமைதியாக இருந்தால் அவமானம் என்பதால் தேவைப்படும்போதெல்லாம் போராட்டம் செய்ய தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.