காமராஜர் ஆட்சி தான் எங்களது குறிக்கோள். திண்டுக்கல்லில் ஜி.கே.வாசன் பேச்சு

 g.k.vassanதிராவிட கட்சிகளுக்கு மாற்றாக எங்களது புதிய இயக்கம் தமிழகத்தில் அமையும் என முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கவிருக்கும் ஜி.கே.வாசன் நேற்று திண்டுக்கல்லில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது ”எங்களது புதிய இயக்கத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் முன்னணி தலைவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். புதிதாக பலரும் எங்கள் இயக்கத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனை கட்சி தொண்டர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்களுக்கு நமது இயக்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்” என்றார்.

”மக்கள் நம்பிக்கை மட்டுமின்றி பிரபலமானவர்களின் நம்பிக்கையும் பெறும் இயக்கமாக எங்களது புதிய கட்சி மாறும். அப்போது பிரபலமானவர்களும், அனைத்து துறையை சேர்ந்தவர்களும் எங்கள் கட்சியில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்படும்.

எங்களது இயக்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் உள்ளனர். கட்சியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பதவி அளிக்கப்படும். நேர்மை, எளிமை, தூய்மை தான் எங்களது இயக்கத்தின் லட்சியமாகும்.

இதனை அடிப்படையாக கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக முதன்மை கட்சியாக எங்களது புதிய இயக்கத்தை மாற்றுவோம். காமராஜர் ஆட்சி தான் எங்களது குறிக்கோள். அவரது கொள்கைகளை பின்பற்றுவோம். வெளிப்படையான நிர்வாகம் நடத்துவோம்” என்றார்.

Leave a Reply