பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரிடம் மோதல் போக்கை கடைபிடித்த முன்னாள் குஜராத் பெண் கவர்னரும், தற்போதைய மிசோராம் கவர்னருமாகிய கமலா பேனிவால் நேற்று அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மோடி அரசு பதவியேற்றவுடன் நீக்கப்படும் இரண்டாவது கவர்னர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் புதுச்சேரி கவர்னாராக இருந்த வீரேந்திர கட்டாரியா நீக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.
பாரதிய ஜனதா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முந்தைய காங்கிரஸ் அரசால் நியமனமான கவர்னர்களை அதிரடியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. ஒருசில மாநில கவர்னர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தனர். சிலர் ராஜினாமா செய்யாமல் முரண்டு பிடித்ததால் அவர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குஜராத்தில் மோடியுடன் அடிக்கடி மோதல் போக்கை கடைபிடித்த கவர்னர் கமலா பேனிவால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மிசோராம் மாநிலத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். மிசோராம் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட ஒரே மாதத்தில் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிறப்பித்து இருப்பதாக அவருடைய மாளிகை செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, மணிப்பூர் மாநில கவர்னர் வி.கே.துக்கல், மிசோரம் கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.