கண் திருஷ்டி நீக்கும்.. கஜேந்திர மோட்சம்!

Gajendra_Moksanaவைகுண்டத்தில் திருமாலுக்கு இடையறாது தொண்டு செய்பவர்கள் நித்திய சூரிகள் என்று அழைக்கப்படுபவர். இதில் திருமாலுக்கு வாகனமாக அமைந்தவர் கருடன், ஆடி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர், பறவை இனங்களில் ராஜாவாகக் கருதப்படுபவர் என்பதால் பட்சி ராஜன் என்றும் அழைக்கப்படுவர். இவரின் தாயார் வினதையின் பெயரை முன்னிட்டு இவரை வைன தேயன் என்றும் அழைப்பர். இவரை திருமாலின் பெரிய திருவடி என்றும் போற்றுவர். வேதமே வடிவான இவரின் கைங்கர்யத்தை மெச்சி திருமால் இவரை தனது வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றுக்கொண்டார். ஆழ்வார்களில் பெரியாழ்வார், கருடனின் அம்ஸமாக அவதரித்தார். கஜேந்திர மோட்ச வைபவத்தில், பகவான் கருடனை விட்டு விட்டு அவசரமாக கஜேந்திரன் என்ற யானையைக் காப்பாற்றப் புறப்பட்டபோது கருடன் தாமதமாகக் கிளம்பி திருமாலின் அவசரத்திற்கு அனுகுணமாக நடந்து கொண்டார்.

முதலையின் வாயில் தன் காலை மாட்டிக் கொண்டு அவதிப்படும்போது அந்த யானை “ஆதி மூலமே…” என்று அலறியது. தாம் செல்வத்திற்குள் யானைக்கு ஏதாவது தீங்கு நேரிட்டு விடக் கூடாதே என்று முதலில் தன் சக்ராயுதத்தைத் திருமால் ஏவிவிட அது முதலையின் தலையை அறுத்து யானையைக் காப்பாற்றியது. தன் பக்தனின் கஷ்டங்களைத் தீர்க்க பகவான் எந்த அளவிற்கு முயற்சி எடுக்கிறான் என்பதை இந்த கஜேந்திரன் கதையிலிருந்து அறியலாம். பகவானின் காக்கும் தன்மையைப் பாராட்டும் பட்டர் பெருமானே, நீர் உன் பக்தனைக் காப்பதில் பெருமையில்லை. அதில் நீ காட்டிய வேகமே மிகவும் போற்றுதலுக்குரியது என்று புகழ்கிறார்.

கஜேந்திர மோட்ச வைபவம் எல்லா திருமால் திருத்தலங்களிலும் கொண்டாடப்படுகிறது. அன்று பெருமான் கருடசேவையில் வீதி உலா வருவார். கஜேந்திர மோட்ச வைபவம் பல தலங்களிலும் கொண்டாடப்பட்ட போதும், குறிப்பிட்டு சில தலங்களைக் கூறலாம். திரு அட்டபுயகரம், திருமோகூர், கபிஸ்தலம் ஆகிய தலங்களே அவை. திரு அட்டபுயகரத்தில் கருடாரூடனாக ஒரு திவ்ய மங்கள விக்ரஹம் இதற்குச் சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம். திருவல்லிக்கேணியில் வரதராஜ பெருமான் மூலவர் கருடஸேவையில் காட்சியளிக்கிறார். மற்றும் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் கருடாடரூடனான கஜேந்திர வரதராஜப் பெருமானை தரிசிக்கலாம்.

Leave a Reply