காணாமல் போனது கிடைக்க இடமணல் ஓதவனேஸ்வரர் கோவில்

Tamil-Daily-News-Paper_3055492639542

காவிரியின் வடபால் கடற்கரை பக்கம் உள்ள சிவாலயங்களை சுந்தரரும் அவரது சீடர்களும் தரிசித்து வந்து கொண்டிருந்தனர். பூம்புகாரை தரிசித்து விட்டு திருமுல்லைவாயிலை நோக்கிச் சென்றனர். வடகால் என்ற ஊருக்கு வந்த போது நல்ல பசி. உண்ண உணவில்லை. அருகில் வீடுகள் ஏதும் இல்லை. சுந்தரரும் அவரது சீடர்களும் மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். ‘‘இறைவா! உன்னை தரிசிக்க வந்த எங்களுக்கு ஏன் இந்த சோதனை?’’ என்று புலம்பிவிட்டு மயக்கமானார் சுந்தரர். சற்று நேரத்தில் யாரோ தன்னை எழுப்புவதை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்த சுந்தரர் எதிரே ஒரு அந்தணர் கையில் கட்டுச்சோற்று மூட்டையுடன் இருப்பதைக் கண்டார். அவர் அனைவரையும் அமரவைத்து உணவைப் பரிமாறினார்.
அனைவரும் உண்டு களைப்பு நீங்கியபோது, ‘‘எங்கள் பசியைப் போக்கிய உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வது?’’ என்று சுந்தரர் கேட்க, பதிலுக்கு நகைத்த அவர் உடனே மறைந்து போனார்.

திகைத்தார் சுந்தரர். அப்போது அசரீரி ஒலித்தது. ‘சுந்தரரே! என் தந்தைக்குப் பெருமை சேர்க்கும் பத்து சிவாலயங்களைக் கட்டுங்கள்’ பேசியது விநாயகர் என்பதைப் புரிந்து கொண்ட சுந்தரர் அப்படியே பத்து சிவாலயங்களைக் கட்டினார். ஆனால், கால ஓட்டத்தில் அந்த சிவாலயங்கள் சிதைந்து போயின. ஆலயம் கட்ட மணல் எடுத்த அந்த இடமணல் என்ற ஊரிலேயே சில சிவலிங்கங்கள் மண்ணில் புதையுண்டு போயின. அப்படி புதையுண்டு போன ஒரு சிவலிங்கம் ஒரு வயதான பெண்மணியின் பார்வையில் பட்டது; ஆலயம் உருவானது. இடமணல். ஒரு சிறு கிராமம். அங்கே உள்ள தன் உறவினர்களைப் பார்க்க வயதான தம்பதி வந்தனர். வழியில் சாலையோரம் இருந்த அரசமரத்தடியில் களைப்பு தீர அமர்ந்தனர். நிழலின் குளுமையால் சற்றே கண்ணயர்ந்தனர் இருவரும். கண் விழித்து தங்கள் பயணத்தை தொடர முயன்றபோது அந்தப் பெண்மணியை மரத்தடி ஈர்த்தது.

அங்கே கறுப்பு வண்ணத்தில், மணலில் ஏதோ தெரிய அவள் கணவனிடம் தெரிவித்தாள். இருவரும் அதனருகே சென்று மணலை கரங்களால் தோண்டிப் பார்க்க அது ஒரு சிவலிங்கத்தின் முன் பகுதி என அறிந்தனர். உடனே ஊர் மக்களைக் கூட்டினர். அவர்களும் மணல் மேட்டைத் தோண்டியபோது அங்கே பிரமாண்டமான சிவபெருமானின் திருமேனியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தனர். சிலநாட்களில் அங்கே ஒரு கோயில்
உருவாயிற்று. இறைவன் பெயர் ஓதவனேஸ்வரர். இறைவி அன்னபூரணி. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நந்தி, பீடத்தை அடுத்து சிறிய மகாமண்டபம். வலதுபுறம் அன்னபூரணி நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

மண்டபத்தின் வலது புறம் முருகனும் இடது புறம் பிள்ளையாரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் ஓதவனேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருட்பாலிக்கிறார். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் போன்று இங்கு இறைவனின் திருமேனி மிகப்பெரிய அளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடை
பெறுகிறது. இங்கு உற்சவமூர்த்திகள் இல்லை. எனவே திருவீதியுலா கிடையாது. காணாமல் போய் மீண்டும் வந்து அருட்பாலிக்கும் இந்த இறைவன் தனது பக்தர்களின் காணாமல் போன பொருட்களையும் இழந்த சொத்துகளையும் மீட்டு அருளும் குணம் கொண்டவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சீர்காழி – திருமுல்லைவாயில் பேருந்து சாலையில் சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இடமணல்.

Leave a Reply