கனவுக்கு உயிர் கொடுக்கும் கடன்கள்

tax-benefits-of-second-home-loan2

சொந்த வீடு வாங்குபவர்களின் கனவைப் பெரும்பாலும் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களே நிறைவேற்றுகின்றன. பெரும்பாலும் வீடு கட்டவும், வீடு வாங்கவும் மட்டுமே வங்கிகள் கடன் அளிக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். வீட்டுக்கு மட்டுமல்ல, அதுசார்ந்த பல விதமான கடன்களையும் வங்கிகள் வழங்குகின்றன.

டாப் அப் லோன்

மொபைல் போனில் ரீசார்ஜ் செய்த பணம் தீர்ந்தால் என்ன செய்வோம்? மீண்டும் டாப் அப் செய்துகொள்வோம் இல்லையா? அதுபோன்ற ஒரு கடன் தான் டாப் அப் லோன். ஏற்கெனவே வாங்கிய வீட்டுக் கடனுக்கு மேல் இன்னும் சிறிது கடன் வாங்கிக்கொள்ளலாம். இந்தக் கடனை வீட்டுத் தொடர்பான பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஃபர்னிச்சர்கள் வாங்குவது, குடும்பச் செலவு என வேறு சில தேவைகளுக்காகவும்கூட பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் ஒரே ஒரு நிபந்தனை இருக்கிறது.

வாங்கும் கடனை எதற்காகச் செலவு செய்யப் போகிறோம் என்பதை முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைவிடச் சிறிது அதிகமாக இருக்கும். தனியார் வங்கிகளில் இந்தக் கடன் அதிகம் வழங்கப்படுகிறது.

மனை வாங்கக் கடன்

சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். அதுபோல வீட்டு மனை என்று ஒன்று இருந்தால்தானே வீடு கட்ட முடியும். பலரும் வீட்டு மனைக் கடன் பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை. வீட்டு மனை வாங்கவும்கூட கடன் அளிக்கப்படுகிறது. பெரும்பாலும் தனியார் வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் இந்த வகைக் கடனை வழங்கத் தயாராக இருக்கின்றன.

மனை வாங்குவதற்காக கடன் வாங்கினால், அந்த மனையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் வீடு கட்ட வேண்டும் என்று நிபந்தனையும் உண்டு. இந்த வகைக் கடனுக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைவிடச் சற்றுக் கூடுதலாக இருக்கும்.

வீட்டு மேம்பாட்டுக் கடன்

இப்போது இருக்கும் வீடு பழுதாகிவிட்டது அல்லது இன்னும் கூடுதலாக ஒரு அறை கட்ட வேண்டும் என்றால் அதற்காகக் கைக் காசை வைத்து பணியைத் தொடங்க வேண்டும் என்றில்லை. அதற்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. இந்தக் கடனை வீட்டைப் புதுப்பிக்க, பழுது பார்க்க, கூடுதலாக அறைகள் கட்டிக்கொள்ள, மாடி கட்டவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டைல், மார்பிள், கிரானைட் பதிக்க, தரமான மரக் கதவுகள், ஜன்னல்கள், அலமாரிகள் அமைக்கவும்கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கடனுக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைவிடச் சற்று அதிகமாக வட்டி இருக்கும். இதேபோல வீட்டு விரிவாக்கக் கடனும்கூட வழங்கப்படுகின்றன.

Leave a Reply