ஒரு கதையை ஒரு படத்தில் எடுக்கலாம், இரண்டாவது படத்தில் எடுக்கலாம், ஆனால் ஒரே கதையை அடுத்தடுத்து தனது அனைத்து படத்திலும் கொஞ்சம் மாற்றத்தை மட்டும் செய்து வெளியிட்டால் அப்புறம் அந்த இயக்குனரை மக்கள் மாற்றிவிடுவார்கள். இதுதான் நடந்துள்ளது காஞ்சனா 2
ஹாலிவுட்டில் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என படம் எடுக்கப்படும்போது வெவ்வேறு கதையம்சம், காட்சி அமைப்பு என வித்தியாசமாக மிரட்டுவார்கள் ஆனால் நம்மூரில் பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதே கதையை கொஞ்சம் வேறு மாதிரி எடுக்கின்றனர். ராகவா லாரன்ஸும் இதே தவறைத்தான் செய்துள்ளார். முதல் இரண்டு படங்களில் அமைத்த காட்சிகளை கொஞ்சம் மாற்றி எடுத்துள்ளார். பேய்க்கதையை இந்த பாகத்தோடு முடித்துவிட்டு ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் வேறு கதையை யோசிப்பது நலம்.
சுஹாசினி நடத்தும் தனியார் தொலைக்காட்சி ஒன்று பல வருடங்களாக முதலிடத்தில் உள்ளது. திடீரென அந்த தொலைக்காட்சியின் போட்டியாளர் முதலிடத்தை பிடித்துவிட அதிர்ச்சியாகும் சுஹாசினி, எப்படியாவது முதலிடத்தை பிடிக்க வேண்டும், என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யும்போது டாப்சி ஒரு ஐடியா தருகிறார். பேய் இருப்பது போன்று ஒரு பரபரப்பை உருவாக்கி அதை படம் பிடித்து நமது டிவியில் ஒளிபரப்பலாம் டி.ஆர்.பி ரேட் எகிறிவிடும் என கூற அதை செயல்படுத்த உடனே முயற்சி எடுக்கின்றனர்.
கேமராமேன் ராகவா லாரன்ஸுடன் மகாபலிபுரம் அருகேயுள்ள ஒரு பங்களாவுக்கு செல்லும் டாப்சி அங்கு பேய் இருப்பது போன்று ஒரு செட்டப்பை செய்து படம் எடுக்கின்றார். அப்போது உண்மையாகவே பேய் வருகிறது. தற்செயலாக ஒரு தாலி டாப்சியின் கையில் கிடைக்க,அதிலிருந்து டாப்சிக்கும், ராகவா லாரன்ஸுக்கும் பிரச்சனை ஆரம்பமாகிறது. டாப்சி, ராகவா ஆகியோரை பிடித்த பேயின் நோக்கம் என்ன என்பதுதான் இரண்டாம் பாதி.
மற்ற படங்களை போலவே ராகவா லாரன்ஸ் இந்த படத்திலும் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு அலட்டலோடு நடித்துள்ளார். இவருக்கு இந்த பில்டப் தேவைதானா? என்று தியேட்டரில் பலர் குரல் கொடுக்கின்றனர். ஓவர் ஆக்டிங் நடிப்பு, எரிச்சல் தரும் காமெடி, புதுமையாக எதுவும் இல்லாமல் மீண்டும் ஒரு பழைய படத்தை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது.
படத்தின் ஒரே ஆறுதல் டாப்சியின் பெர்மான்ஸ்தான். ரொமான்ஸ், பயம், மிரட்டல் என பலவகையான முகபாவங்களை இவ்வளவு எங்கே ஒளித்து வைத்திருந்தார் என்பது புரியாத புதிர்.
நித்யாமேனன், கோவை சரளா, மயில்சாமி, ரேணுகா, ஜெயப்பிரகாஷ், ராஜேந்திரன் ஆகியோர்களின் நடிப்பும் ஓகேதான்
இரண்டாவது பாதி பயங்கர இழுவை. அதிலும் நித்யாமேனனின் பிளாஷ்பேக் பயங்கர போர். கிளைமாக்ஸில் ஒரே சத்தம்தான் கேட்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக இருந்தாலும், விழலுக்கு இறைத்த நீர்.
கிளைமாக்ஸில் வரும் சண்டிமுனி பாடல் மட்டும் ஓரளவுக்கு தேறுகிறது. மற்றபடி பாடல்கள் அனைத்தும் சுமார்தான். பின்னணி இசையில் தமன் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே மிக அருமை.
முதல்பாதியில் காமெடியுடன் த்ரில கலந்து ஓரளவுக்கு பாஸிட்டிவ்வாக சென்று கொண்டிருந்த படம் இரண்டாவது பாதியில் மொக்கைக்கு மாறுகிறது.
மொத்தத்தில் காஞ்சனா 2 காமெடி கலந்த கடுப்பு.