காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் யாருக்கு சொந்தம்!

GW299H581

வரதராஜ பெருமாள் கோவில் என, அழைக்கப்படும், தேவராஜசுவாமி கோவில், வடகலை, தென்கலை என, எந்த பிரிவையும் சார்ந்தது அல்ல. இருவருக்கும் பொதுவானது. எனவே, எந்த ஒரு திருமண்ணையும், தென்கலையோ, வடகலையோ, புதிதாக புகுத்த அனுமதிக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோவில். இக்கோவில் கருவறை நுழைவு வாயிலில் (குலசேகரன்படி), வெள்ளிக் கவசம் பொருத்த, பெங்களூரை சேர்ந்த, விஸ்வநாத், ஹரிநாத் ஆகியோர் கோவிலுக்கு மனு அளித்தனர். கோவில் சார்பில், அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, சங்கு, சக்கரம், ஆதிசேஷன் பொறிக்கப்பட்ட, 23.350 கிலோ எடையுள்ள, வெள்ளிக்கவசம், உபயதாரரால் வழங்கப்பட்டு, துறை அலுவலர் முன்னிலையில், 2011 ஆகஸ்ட், 25ல் பொருத்தப்பட்டது. அதன்பின், கோவில் அனுமதியின்றி, சிலர் தனியாக, கவசத்தில் வடகலை திருமண் பொருத்தினர். இதை அறிந்த, கோவில் நிர்வாகம், அந்த கவசத்தை அகற்றியது. வடகலை திருமண் உடன் கூடிய, வெள்ளிக் கவசத்தை, மீண்டும் பொருத்த உத்தரவிடக் கோரி, சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த சமய அறநிலையத் துறை ஆணையர் முன், சீராய்வு மனு தாக்கல் செய்திடவும், அதன் மீது, ஒரு மாத காலத்திற்குள், இறுதி உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டார்.அதன்படி, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, கமிஷனர் விசாரித்தார். உரிய விசாரணைக்கு பின், உபயதாரர் வழங்கியபடியே, சங்கு, சக்கரம், ஆதிசேஷன் ஆகியவற்றுடன் மட்டும், வெள்ளிக்கவசம் பொருத்திட, நிர்வாக அறங்காவலருக்கு உத்தரவிட்டு, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து, மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இந்து சமய அறநிலையத் துறை செயலர் கண்ணன் விசாரித்தார்.விசாரணை முடிவில், அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உபயதாரர் எந்த நோக்கத்திற்காக, உபயமாக வழங்கினாரோ, அதை விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிறைவேற்றும்படி கோர உரிமையுண்டு. ஆனால், விதிமுறையை மீறிய கோரிக்கையை நிறைவேற்றும்படி கோர, உபயம் வழங்கியவருக்கே உரிமை இல்லை. இந்நிலையில், உபயதாரர் வழங்கிய கவசத்தில், வடகலை திருச்சின்னம் பொறிக்க வேண்டும் எனக்கோர, மனுதாரருக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.

இக்கோவிலில், வடகலை மற்றும் தென்கலை பிரச்னை, பல நுாற்றாண்டு காலமாக, இரண்டு பிரிவுகளாலும், ஒவ்வொரு நிகழ்விலும் எழுப்பப்பட்டு, பல வழக்குகள், பல நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர், வடகலை நாமம் இட வேண்டும்; தென்கலை நாமம் இடக்கூடாது என, வலியுறுத்துகிறார். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்த்திடவே, எந்த நாமமும் இல்லாமல், கவசம் பொருத்திட, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதில், தவறு எதுவும் இல்லை. கோவில் தொடர்பாக, இரு பிரிவினரும் தாக்கல் செய்த, பல வழக்குகளில், இந்த கோவில், எந்தப் பிரிவையும் சார்ந்தது அல்ல என, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக, பல நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட, பல தீர்ப்புகளாலும், இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையிலான பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. எனவே, கோவில் பிரதான நுழைவு வாயிலில், வடகலை நாமம் இல்லாமல் பொருத்தப்பட்டுள்ள, வெள்ளிக்கவசம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவை எதிர்த்து, வடகலை ஸ்ரீவைஷ்ண சம்பிரதாய சபா செயலர் ரமேஷ் தாக்கல் செய்த, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடலாம் என, முடிவு செய்து, அரசு அவ்வாறே ஆணையிடுகிறது. இவ்வாறு கண்ணன் உத்தரவில் தெரிவித்துள்ளார். -நமது நிருபர்-

Leave a Reply