காஞ்சி சங்கராச்சாரியார் மருத்துவமனையில் அனுமதி. கவலையில் பக்தர்கள்
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திராவில் உள்ள மடத்திற்கு விரதம் அனுஷ்டிக்கச் சென்றுள்ள நிலையில் அங்கு அவர் திடீரென மயக்கமடைந்ததாகவும், இதன் காரணமாக அவர் ஆந்திராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காஞ்சி மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்னும் மயக்கத்திலேயே இருப்பதால் அவரது பக்தர்கள் கவலையில் உள்ளனர்.
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நிலை குறித்து காஞ்சி சங்கர மட நிர்வாகிகள் கூறியபோது, ” ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் உள்ள சங்கர மடத்திற்கு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பதற்காகச் செல்வது வழக்கம். அப்படித்தான் கடந்த ஜூலை மாதம் இரண்டாவது வாரம் பெரியவரும் சின்னவரும் விஜயவாடா சங்கர மடத்திற்கு விஜயம் செய்தனர்.
தொடர்ச்சியான விரதம் அனுசரித்ததால் பெரியவரின் உடலில் ரத்த அழுத்தமும் சோடியம் குறைவும் ஏற்பட்டுள்ளது. சர்க்கரையின் அளவு குறைந்ததால் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார். இப்படியொரு நிலை ஏற்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. உடனே நாங்களும் அங்கிருந்த மடத்தின் உதவியாளர்களும் அவரை விஜயவாடாவில் உள்ள ஆந்திர மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். ஐ.சி.யு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சி.டி ஸ்கேன் சோதனை செய்யப்பட்டுவிட்டது. இன்னும் மயக்கநிலையில்தான் இருக்கிறார். தொடர்ந்து ஐ.சி.யு பிரிவில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். விரைவில் மடத்திற்கு திரும்புவார்” என்று கூறினர்