காஞ்சீபுரம் திருக்காளிமேடு பகுதியில் வசிப்பவர் பழனி. இவரது மகன் மணிகண்டன் (வயது 31). இவர் பிரபல ரவுடியாக நகரில் வலம் வந்தார். ரவுடி மணிகண்டன் மீது இரண்டு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்குகள் உள்ளன. மணிகண்டன் நேற்று இரவு திருக்காளிமேடு வேப்பங்குளம் என்ற இடத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ஒரு மர்ம கும்பல் திடீரென கீழே இறங்கி ரவுடியை கத்தியால் கழுத்து, கை, மார்பு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதில் கீழே சாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தார். பிறகு ஆட்டோவில் அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செ.விஜயகுமார் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு வி.பாலச்சந்திரன், தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், முரளி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு வனிதா என்ற மனைவியும், சஞ்சய் (11) என்ற மகனும், பவானி (8) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் ஆட்டோ ராஜி, பொய்யாக்குளம் தக்காளி சீனு உள்பட பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், ஒரு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் இருந்ததாகவும் துணை போலீஸ் சூப்பிரண்டு வி.பாலச்சந்திரன் தெரிவித்தார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.