சென்னையில் கனிமொழி எம்பி திடீர் கைது
தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் சரியான நேரத்தில் விநியோகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கூறியுள்ள எதிர்க்கட்சியான திமுக, இன்று தமிழகம் முழுவது நியாய விலைக்கடைகள் முன்பு போராட்டம் நடத்தபோவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டார். நியாயவிலை கடைகளில் துர்நாற்றத்துடன் கூடிய அரிசியே வழங்கப்படுவதாகவும், பருப்பு, பாமாயில் உள்ளிட்டவற்றை முறையாக விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைதான பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறினார்.
சென்னை போலவே தமிழகம் முழுவதிலும் திமுகவினர் நியாய விலைக்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரேஷன் கடைகள் முன் திமுகவினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவது நாடகமே என்றும், பொதுவிநியோக திட்டம் மூலம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரேஷன் கடைகளில் முறையாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.