திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை இழுத்து மூடுவோம். கனிமொழி எம்பி உறுதி
நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கொடுத்துள்ள ஒரே வாக்குறுதி மதுவை ஒழிப்போம் என்பதுதான். அதிமுக மட்டும் படிப்படியாக மதுவை ஒழிப்போம் என்றும் மற்ற கட்சிகள் ஒரே கையெழுத்தில் மதுவை ஒழிப்போம் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசியும், தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய வாக்குறுதியாக அளித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவினர் மது ஆலைகளை மூடுவோம் என்று கூடுதலாக ஒரு வாக்குறுதியை அளித்துள்ளார்.
சேலம் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் கனிமொழி பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் 6,800 மதுக்கடைகள் திறந்ததுதான் சாதனை. 70 லட்சம் பேரை தமிழகத்தில் குடிகாரராக மாற்றி, 3 கோடி குடும்பங்களை வேதனை கண்ணீர் வடிக்க வைத்தவர்தான் ஜெயலலிதா. மேலும் திமுகவினரே மது ஆலைகளை நடத்துவதாக அரசியலுக்காக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டவுடன் தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு கண்டிப்பாக வரும், அவ்வாறு மதுவிலக்கு அமல்படுத்தியவுடன் திமுகவினரோ, திமுகவினரின் உறவினர்களோ மது ஆலைகளை நடத்தி வந்தால், அவை அனைத்தும் உடனே இழுத்து மூடப்படும்’ என்று கூறினார்.
மேலும் ‘விஷன் 2023’ என்ற தொலைநோக்கு திட்டம் மூலம் ரூ.15 லட்சம் கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதாக முதல்வர் கூறினார். ஆனால், ஒரு பணியாவது நடந்ததா? சேலத்துக்கு ரிங்ரோடு, மேம்பாலம் திட்டம் கொண்டு வருவதாக கூறினார். இதை ஏதாவது செய்துள்ளாரா? சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 210 நாட்கள் கடந்து விட்டன. ஆனால், ஒரு ஆலையாவது செயல்பாட்டுக்கு வந்ததா? விதி 110-ன் கீழ் 210 திட்டங்களை அறிவித்தார். ஒரு திட்டமாவது நிறைவேறியதா? என்று கேள்வி மேல் கேள்விகளாக கேட்டார்.
Chennai Today News: Kanimozhi speech about alcohol factory closed
இந்த செய்தியை இதுவரை படிக்கவில்லையா? தயவுசெய்து படியுங்கள்