விஜயகாந்தை அடுத்து பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கனிமொழி
சமீபத்தில் பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் துப்பிய விவகாரத்தின் பரபரப்பே இன்னும் முடியாத நிலையில் தற்போது திமுக தலைவர் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி பத்திரிகையாளர் ஒருவரின் மைக்கை தட்டி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. மகளிர் அணி சார்பில், அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு, ஊழல், விலைவாசி உயர்வு ஆகியவைகளை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், ராஜ்ய சபா எம்பியுமான கனிமொழி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “பழ.கருப்பையா வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க.விற்கு இது புதியதில்லை என்றாலும், எதிர்கருத்து கொண்டவர் என்பதற்காக தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது’ என்று கூறினார்.
அப்போது ‘மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி, அவர் மீண்டும் தி.மு.க.வில் இணைவார் என சொல்லப்படுகிறதே?’ என செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளிக்க மறுத்த கனிமொழி, கோபத்தோடு செய்தியாளர்களின் மைக்குகளை தட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இதனால் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.