கொடுங்கல்லூர் பகவதி, ஆற்றுக்கால் பகவதி, மாடாயி பகவதி ,திருவாலத்தூர் பகவதி, செங்கன்னூர் பகவதி போன்றவை கேரளத்தில் இருக்கும் மிகப் பழமைவாய்ந்த, புகழுடைய கண்ணகி அம்மன் ஆலயங்கள் ஆகும். ஆறு கோடிக்கு மேலான தமிழர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் சில ஆயிரம் பேர்களுக்கு கூட இவை தெரியாதவை. ஏன் இந்த நிலை?
இந்தியா முழுதும் இருக்கும் ஆலயங்களை எழுதும் தமிழகத்தின் நாளிதழ்கள், வார இதழ்கள் கண்ணகி அம்மனை இருட்டடிப்பு செய்வதில் ஒத்துமையோடு உள்ளன.
கேரளத்தில் கோட்டயம் திருவல்லா கடந்து சபரிமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஊர் செங்கன்னூர். பம்பை ஆற்றங்கரையில் பரந்து விரிந்து கிடக்கிறது செங்கன்னூர் மகாதேவ ஆலயம்.
பெயரில் ஆண் தெய்வம் இருந்தாலும் செங்கன்னூர் பகவதி என்றுதான் சொல்வார்கள்.
இந்தக் கோவிலின் மேல்சாந்திக்கு மற்றகோவிலின் சாந்திகளில் இருந்து வேறுபட்ட ஒரு முக்கியமான நித்தியக் கடன் ஒன்று உண்டு.
இரவுகளில் இணத்தோர்த்து (இணைத் துவர்த்து) உடுத்துறங்கும் தேவியின் உடையாடையில் மாதவிடாயின் அம்சம் ஏதேனும் இருக்கிறதா என்று தினமும் காலையில் பரிசோதிக்கும் கடன் அது.
தூமையின் அம்சம் இருக்குமாயின் அந்த உடையாடையை கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார் அவர்.
கோவிலின் தந்திரிவகையினரான தாழமண் மற்றும் வஞ்சிப்புழை இல்லத்தைச் சேர்ந்த மூத்த பெண்கள் யாரேனும் வந்து விலக்கை உறுதிப்படுத்துகிறார்கள். ‘திருப்பூத்து’ உறுதியானவுடன் தேவியின் நடை அடைக்கப்படுகிறது. ஸ்ரீகோவிலுக்கு வெளியே நாலம்பலத்துக்குள் வேறேதேனும் ஒரு இடத்தில் உற்சவ தேவியாகிறாள் அவள்.
இப்போது அவள் தமிழ் மரபுப்படி வெள்ளை ஆடையணிந்த செங்கமலவல்லி.
நான்காம் நாள். பம்பை நதிக்கரையின் மித்திரக்கடவுத் துறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கே அவளுக்கு புனித நீராட்டு செய்யப்படுகிறது. திருப்பூத்து ஆறாட்டு. பின் யானையின் மீது அமர்ந்து கோவிலுக்கு செல்கிறாள்.
கோவில் வாசலில் மகாதேவன் அவளுக்காக இன்னொரு யானையில் காத்துக் கொண்டிருக்கிறார். நாலம்பலத்தை மும்முறைபிரதிட்சணம் செய்கிறார்கள். மகாதேவன் கிழக்கு திசையிலும் வல்லி மேற்கு திசையிலுமாக தங்கள் நடைகளுக்குள் நுழைந்து கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் மாதம் தவறாமல் ஏற்பட்டுக்கொண்டிருந்த விலக்கின் கிரமம் இப்போது குறைந்திருக்கிறது என்றாலும் பக்தர்களிடம் திருப்பூத்து ஆறாட்டின் மகிமை இன்னும் மங்கிவிடவில்லை. தேவியின் திருப்பூத்து உடையாடை பக்தர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டு விடுகிறது. அது வீட்டிலிருத்தல் ஐஸ்வர்யம் என்பது ஒரு நம்பிக்கை.
முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி, முன்னாள் கவர்னர் ஜோதி வெங்கடாசலம், சித்திரைத் திருநாள் மஹாராஜா, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரும் இந்த உடையாடைக் காணிக்கையைப் பெற்றிருக்கின்றனர். தேவியின் உடையாடையைப் பெறுவதற்கு முன்பதிவு அவசியம். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. உடையாடைக்கான காணிக்கை ரூ. 501 மட்டுமே.
கற்பேயுருவாகும் கண்ணகியாள் விண்ணுலகத்தில்
பேரொளியா யிலங்குகின்றாள் தற்போது
செங்குன்றூரென்னும் திருப்பதியிற்தேவியாய்
தங்குகின்றாள் தன்னருளைத் தந்து.
இன்றும் இந்தக் கோவிலில் கண்ணகி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். அதுவும் தன் மாதவிடாய் நாட்கள் கூட இன்னும் தீராத ருதுவதியாய்.