கருணாநிதி வாக்குரிமை பறிப்பு. ஜெயலலிதா வாக்குரிமை நீடிப்பு. பெரும் பரபரப்பு
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நீதிமன்றத்தின் ஆணைப்படி விரைவில் நடைபெறவுள்ள நிலையில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1950களில் இருந்து கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தமிழ் சினிமாவிற்கு பல அரிய சேவைகள் செய்த கலைஞர் மு.கருணாநிதியின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது வரை ஆயுட் கால உறுப்பினராக இருந்து வந்த கருணாநிதி, தற்போது தொழில்முறையற்ற ஆயுட்கால உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளதால், அவருடைய வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் தேர்தல் உள்பட இனி நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலில் அவர் வாக்களிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போதும் ஆயுட்கால உறுப்பினராக நீடிப்பதால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. இந்த தகவல் திரையுலகினர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆயுட்கால உறுப்பினர்கள் பட்டிலில் நடிகை ராதிகாவின் மகள் ரேயான், ராதாரவியின் மகன் ஹரி ஆகியோர் சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருவரும் எந்த அடிப்படையில் ஆயுட்கால உறுப்பினராக சேர்க்கப்பட்டார்கள் என கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், சரத்குமார் நடத்தும் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த சிலரையும் நடிகர் சங்க உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.