மாட்டுக்கறி சாப்பிட்டால் முதல்வரின் தலையை வெட்டுவேன். பாஜக மூத்த தலைவர் மிரட்டல்
இந்துக்கள் புனிதமாக கருதும் மாட்டின் இறைச்சியை சாப்பிட்டால், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
“எனக்கு மாட்டிறைச்சி பிடித்தால் சாப்பிடுவேன். அதை யாரும் தடுக்க முடியாது. ஒருவரின் உணவு உரிமை குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” என்று சமீபத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து, விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜ்ரங் தளம் ஆகிய இந்துத்துவா அமைப்புகள் கர்நாடக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் பாஜக முன்னாள் துணை முதல்வர் அசோக் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது “மாட்டிறைச்சி சாப்பிடப் போவதாக சித்தராமையா கூறியிருப்பதன் மூலம் பெரும்பான்மை இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்துவதற்காகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முதல்வரே இவ்வாறு பேசுவது சரியல்ல. எனவே, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.
இதே கூட்டத்தில் பேசிய மாவட்ட பாஜக செயலாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளருமான சென்னபசப்பா பேசியபோது, “இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச்சியை சாப்பிடுவேன் என சித்தராமையா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசியுள்ளார். முடிந்தால் அவர் ஷிமோகாவுக்கு வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும். அவ்வாறு சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன்” என ஆவேசமாக பேசினார்.
இவரது பேச்சு பாஜக உள்பட அனைத்து கட்சியினர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவரது பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்த முதல்வர் சித்தராமையா, “சென்னபசப்பா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது பாஜகவின் சகிப்புத்தன்மையற்ற நிலைக்கு மிகச் சிறந்த சான்றாகும். ஒருவரது உணவு விருப்பத்தில் தலையிடுவது மனிதத் தன்மையற்ற செயல்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சித்தரா மையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்ன பசப்பா மீது ஷிமோகா மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பிரசன்ன குமார் போலீஸில் புகார் செய்தார். சென்னபசப்பா மீது 3 பிரிவுகளில் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்