ஒரு கைக்கடிகாரத்தால் முதல்வர் பதவிக்கே ஆபத்தா?
கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த சில நாட்களுக்கு முன்னர் விலையுயர்ந்த ஆடம்பர் கைக்கடிகாரம் ஒன்றை கட்டியிருந்தார். இந்த ஆடம்பர கைக்கடிகாரம் குறித்து சட்டசபையில் தொடர்ந்து பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவதால் முதல்வரின் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக கர்நாடக சட்டசபையில் பாஜக, மஜத மற்றும் எதிர்க்கட்சிகள் முதல்வரின் ஆடம்பர கைக்கடிகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் சட்டசபையே முடங்கியுள்ளது. இதன்காரணமாக முதல்வர் சித்தராமையா அந்த ஆடம்பர கைக்கடிகாரத்தை அரசிடம் ஒப்படைத்தார். இருப்பினும் இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை.
இந்த ஆடம்பர கைக்கடிகாரம் அவருக்கு எப்படி வந்தது? யாராவது பரிசாக கொடுத்தார்களா? என்பது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால் எரிச்சல் அடைந்துள்ள காங்கிரஸ் தலைமை இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆடம்பர கைக்கடிகாரத்தால் சித்தராமையாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் இனியும் இவரை முதல்வர் பதவியில் நீடிக்க வைத்தால் கர்நாடகாவில் காங்கிரஸ் செல்வாக்கு பாதிக்கும் என்றும் காங்கிரஸ் தலைமை கருதுவதாகவும் விரைவில் கர்நாடகாவிற்கு புதிய முதல்வர் அறிவிக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.