ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடா? டெல்லியில் கர்நாடக முதல்வர் பேட்டி

siddharamaiyaaகர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக இன்று காலை 11மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தயாராக உள்ள நிலையில் டெல்லியின் பேட்டியளித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து எந்தவித முடிவையும் கர்நாடக அரசு இதுவரை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா ”ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அரசு இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. இந்த தீர்ப்பை சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வுக்குப் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.

மேலும் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார் ஆகியோரின் கருத்துக்கள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆச்சார்யா, ரவிவர்மா குமார் ஆகிய இருவரும் ஏற்கனவே இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய பரிந்துரைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கட்சியின் தலைமையை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இவ்வாறு சித்தாரமையா கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வரின் இந்த பேட்டி தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, பாமக, காங்கிரஸ் , தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து கர்நாடக அரசை மேல்முறையீடு செய்ய வற்புறுத்தி வரும் நிலையில் கர்நாடக முதல்வரின் இந்த பேட்டி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Leave a Reply