கல்விக்கடன் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவி
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்பிஏ மாணவி ஒருவர் கல்விக்கடன் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் பயனாக அவருக்கு ரூ.1.5 லட்சம் கல்விக்கடன் கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலதின் மாண்டியா பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ மாணவி பீபி சாரா என்பவர், சென்ட்ரல் பாங் ஆஃப் இந்தியாவில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் இதற்கு முன்னர் இந்த மாணவி வாங்கிய கடனை முழுதாக கட்டி முடித்தால் தான் மேற்கொண்டு கடன் வழங்க முடியும் என அவரது கோரிக்கையை வங்கி நிர்வாகம் நிராகரித்து விட்டது.
இதனால் மனமுடைந்த மாணவி பீபீ உடனே பிரதமரின் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்) என்ற திட்டத்தின் கீழ் தனக்கு கடன் வழங்க உதவுமாறு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தனது தந்தைக்கு சுமார் எட்டு மாத காலமாக சம்பளம் வரவில்லை என்றும் எனவே தன்னால் முந்தைய கடனை கட்ட முடியவில்லை என்றும் புதிய படிப்பிற்கு கடன் வழங்க உதவி செய்யுமாறும் அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனையடுத்து அடுத்த பத்து நாட்களுக்குள் மாணவிக்கு பிரதமரிடம் இருந்து பதில் கடிதம் வந்துள்ளது. அதில், மாணவியின் கடிதம் கிடைத்ததாகவும், விஜயா வங்கியில் கல்விக் கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை அவரது தந்தை விஜயா வங்கிக்கு கொண்டு சென்றுள்ளார். வங்கியில் அவர்களது ஆவணங்கள், பின்புலம் உள்ளிட்டவைகள் சரி பார்க்கப்பட்டு, கல்விக் கடன் பெற தகுதியுள்ளவர் என்பதால் மாணவிக்கு ரூ.1.5 லட்சம் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.