ஜெ.வழக்கில் நாளை மறுநாள் மேல்முறையீடு. ஆச்சார்யா அறிவிப்பு

jayaதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வரும் திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

ஆனால் இதே வழக்கின் மேல்முறையீட்டில் பெங்களூர் உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய்தார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் பல தவறுகள் இருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் சுட்டிக்காட்டிய நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்தது.

அதற்காக, அப்பீல் வழக்கில் கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட பி.வி.ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த சில நாட்களாக நீதிபதி குன்ஹா, குமாரசாமியின் தீர்ப்புகளை ஒப்பிட்டு தகவல்கள் சேகரித்து மேல் முறையீட்டு மனுவைத் தயாரித்தார்.

தற்போது அந்த மேல் முறையீட்டு மனு, டெல்லி கொண்டு செல்லப்பட்டு சட்ட நிபுணர்களால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் திங்கட்கிழமை (22 ஆம் தேதி) கர்நாடகா அரசு தரப்பில் அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply