ஜெயலலிதாவின் ஜாமீன் மனு அக்.6ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு. சோகத்தில் அதிமுகவினர்.

jaya punishmentமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை இன்று விசாரணை செய்த விடுமுறை கால சிறப்பு நீதிபதி ரத்னகலா, இந்த வழக்கை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறி விட்டார். இதனால் இன்னும் ஆறு நாட்களுக்கு ஜெயலலிதா ஜெயிலில் இருந்து தீரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட அதிமுகவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யவும், தண்டனையை நிறுத்தி வைக்கவும், சொத்துக்களை முடக்குவது தடை செய்யுமாறும், ஜாமீன் வழங்குமாறும் கோரிக்கை விடுத்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையின் முடிவை தெரிந்து கொள்ள  கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கூடியிருந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மனுவை விசாரித்த நீதிபதி ரத்னகலா விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் இதைப்போலவே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோகர்களின் ஜாமின் மனுவும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் கூடியிருந்த அதிமுகவினர் சோகத்துடன் கலைந்து சென்றனர்.

Leave a Reply