ஜெயலலிதா வழக்கு அப்பீல் குறித்து ஆலோசனை நடத்த இருந்த அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து.

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் நாளை அல்லது நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கின்றார்.

இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என கர்நாடக அரசை திமுக தலைவர் கருணாநிதி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கை மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை செய்ய இன்று பெங்களூரில் முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது.

ஆனால் இந்த கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. ஜெயலலிதா பதவியேற்க உள்ள நிலையில் இந்த கூட்டத்தை கர்நாடக முதல்வர் ரத்து செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை தமிழக எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஜெயலலிதா 23 ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், ஒருவேளை ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அது ஜெயலலிதா பதவியேற்பதற்கு முன்னரே நெருடலை ஏற்படுத்தி, அது தொடர்பான விவாதங்களைக் கிளப்பக்கூடும் என்பதை கருத்தில் கொண்டுதான் கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply