சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 10 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், உடனே அடுத்த பத்து நாட்களுக்குள் தண்ணீரை திறந்தவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நேற்று மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீற முடியாது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்’ என்று கூறினார்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. ஆனால், 15 ஆயிரம் கனஅடி நீருக்கு பதிலாக 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை மட்டுமே கர்நாடகா திறந்து விட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கர்நாடகத்தில் மேலும் போராட்டம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.